Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

உலகம் முழுவதும் தமிழ் அகதிகள் அவலத்தில்:புலம்பெயர் அமைப்புக்களுக்கு பகிரங்க வேண்டுகோள்

SRI LANKA CONFLICTவன்னி இனப்படுகொலையின் பின்னர் உலகம் முழுவதும் தமிழ் அகதிகள் அனாதைகள் போல விதைக்கப்பட்டுள்ளனர். அவலங்களுக்கு மத்தியில் இவர்கள் வாழ்க்கை துயர் மிகுந்த தொடர்கதையாக நீள்கிறது. மலேசியாவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட அகதிகள் இலங்கை இனப்படுகொலை அரசின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தன்சானியா, டோகோ, பெனின்,தென்னாபிரிக்கா போன்ற பல ஆபிரிக்க நாடுகள், வியட்னாம் கம்போடியா போன்ற கிழக்காசிய நாடுகள், இந்தியா,இந்தோனேசியா,பங்களாதேஷ்,பாகிஸ்தான் போன்ற நாடுகள் ஆகியவற்றில் அகதிகள் எப்போதும் திருப்பி அனுப்பப்படலாம் என்ற அச்சத்தில் அடிப்படைவச்திகள் கூட இல்லாமல் வாழ்க்கை நடத்துகின்றனர். இவர்களில் முன்னை நாள் போராளிகள் மற்றும் வன்னியில் இறுதிவரை வாழ்ந்தவர்கள் போன்றோர் அடங்குவர்.

அகதிகளுக்கான ஐ.நா அமைப்பின் முகவர் நிறுவனத்தில் (UNHCR)தம்மை அகதிகளாகப் பதிந்துகொண்ட அகதிகளுக்கு அந்த நிறுவனம் பாதுகாப்பு வழங்குவதாகக் கூறிவருகிறது.
மறுபக்கத்தில் இலங்கையில் போர்க்குற்றம் மற்றும் சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கு எதிரான வன்முறைகளை அரச நிறுவனங்களே திட்டமிட்டு நடத்தி வருவதாக ஐ.நா மனித உரிமை ஆணையகம் பல்வேறு சந்தர்ப்பங்களில் கூறியுள்ளது.

இந்த அடிப்படையில் அகதிகளுக்கான ஐ.நா அமைப்பு இலங்கை அரசினால் உயிராபத்திற்கு உள்ளாக்கப்படலாம் என்று தெரிவிக்கும் அகதிகளைப் பாதுகாக்கும் கடப்பாட்டை வரித்துக்கொண்டுள்ளது.
ஆக, அகதிகள் பாதுகாப்பாக வாழ்வதற்கு இந்த நிறுவனம் பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாட்டில் உள்ளது. இந்த வகையில் நிறுவனத்தின் லண்டன் கிளயைத் தொடர்புகொண்ட போது அதற்கான உறுதியான பதில்கள் எதனையும் தர மறுத்துவிட்டனர்.

இந்தவகையில் புலம் பெயர் நாடுகளில் ஈழப் போராட்டத்தின் தொடர்ச்சியைத் தமது தலையில் சுமப்பதாகக்கூறும் தமிழ் அமைப்புக்கள் UNHCR ஐ தொடர்ப்புகொண்டு அவர்களிடமிருந்து உறுதியான பதிலைப் பெற்றுக்கொள்வது அவசியம்.

போர்க்குற்றம் நிகழும் நாடு என ஐ.நா இனால் தெரிவிக்கப்படும் நாட்டிற்கு அகதிகள் அனுப்பப்படுவதைத் தடுப்பது தொடர்பான தெளிவான நடவடிக்கைகளை அந்த நிறுவனம் முன்வைக்கவேண்டும்.

அவ்வாறு முன்வைக்கத் தவறும் பட்சத்தில் அகதிகளைப் பாதுகாப்பதாகக் கூறும் பொறுப்பிலிருந்து விலகிகொண்டு மக்கள் சார்ந்த மனித உரிமை அமைப்புக்கள் உருவாகுவதை அனுமதிக்க வேண்டும்.

இந்த அடிப்படைகளை முன்வைத்து, அகதிகளுக்கான ஐ.நா முகவர் நிறுவனத்தின் அலுவலகம் முன்பான கவனயீர்ய்ப்பு ஆர்ப்பாட்டத்தில் புலம்பெயர் அமைப்புக்கள் ஈடுபட வேண்டும்.

தவிர, உலகம் முழுவதுமுள்ள அகதிகளின் எண்ணிக்கை அவர்களின் அன்றாட வாழ்க்கை தொடர்பான புள்ளிவிபரங்களை மக்கள் முன் இந்த அமைப்புக்கள் வைக்க வேண்டும். இன்றும் வர்த்தக நிலையங்கள் உண்டியல் ஊடகப் பணம் சேர்க்கும் இப் புலம்பெயர் அமைப்புக்களின் நிதி வளம், நிகழ்வுகளினூடாகத் திரட்டப்படும் பணம் போன்றன அகதிகளுக்காக எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை வெளிப்படையாக முன்வைக்க வேண்டும்.

இவை அனைத்துனதும் ஆரம்பமாக UNHCR அலுவலகங்களின் முன்பாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட வேண்டும். இதனைப் பகிரங்க வேண்டுகோளாக புலம்பெயர் மற்றும் தென்னிந்திய அமைப்புக்களிடம் இனியொரு சார்பில் முன்வைக்கிறோம்.

Exit mobile version