இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள், கடத்தல்கள், காணாமல் போகச்செய்தல், சட்டத்துக்குப் புறம்பான கைது, படுகொலை என்பவற்றால் பாதிப்படைந்து UNHCR யையே முழுதாக நம்பி 5000 ற்கும் மேற்பட்டோர் அகதியாக பதிவுசெய்து மலேசியாவில் வாழ்ந்து வருகின்றனர்.
எனினும் சமீப காலமாக UNHCR இன் செயல்பாடுகள் கவலையளிப்பதாகவும், சந்தேகத்துக்கிடமானதுமாக உள்ளது.
UNHCR இல் அகதியாக பதிசெய்யப்பட்ட ஒருவர் பொலிசாரால், அல்லது குடிவரவுத்துறை அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டால், 14 நாட்களில் நீதிமன்றம் கொண்டு செல்லப்படும் போது UNHCR இல் பதிவுசெய்யப்பட்ட அகதிகள் என UNHCR இன் பிரதிநிதியால் உறுதிசெய்யப்படும் போது அவர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்படுவார், அல்லது மீண்டும் தடுத்து வைக்கப்பட்டு அடுத்த 14 நாளும் நீதிமன்றத்தில் ஓர் சந்தர்ப்பம் வழங்கப்படும். அப்போதாவது UNHCR ஆஜராகி சம்பந்தப்பட்டவரை விடுவிக்கலாம். ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இவ்விடயம் புறக்கணிக்கப்படுகின்றமையால் பலர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டு சித்திரவதைக்குள்ளாகும் நிலை உண்டாகியுள்ளது.
கடந்த வாரத்திலும் மகாதேவன் கிருபாகரன் (வயது 42), குசாந்தன் சந்திரலிங்கராஜா (வயது 45) ஆகியோர் கருப்பு முகமூடி அணிந்து வந்த மலேசியா பொலிசாரினால் கடத்தல் பாணியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் UNHCR இல் பதிவு செய்த அங்கீகரிக்கப்பட்ட அகதி ஒருவர் திருமணம் முடிக்க வேண்டுமாயின் பதிவுத்திருமணம் செய்துகொள்ள முடியாது, எனவே சமய முறைப்படி திருமணம் செய்து அதற்கான ஆதாரங்களுடன் கணவனை / மனைவியை UNHCR இல் கணவனாக / மனைவியாக பதிவுசெய்து கொள்ளல் வேண்டும், அவ்வாறான பதிவுக்காக செல்பவர்கள் தொலைபேசி மூலம் அழைப்பதாக திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
எனினும் 1 வருடத்துக்கும் மேலாக அழைப்புகள் வருவதும் இல்லை பதிவுசெய்யப்படுவதும் இல்லை, இப்படியாக எந்த பதிவும் இல்லாமையினாலும் பலர் கைதாகி சிறையில் உள்ளனர், இவ்வாறான UNHCR இன் புறக்கணிப்பின் உச்சமாக ஒருவருடத்துக்கும் மேலாக தனது மனைவியை பலமுறை பதிவுசெய்ய முயற்சித்தும் UNHCR வேண்டுமென்றே புறக்கணித்து வந்த ஒருவரின் மனைவி கடந்த மே 18 ம் திகதி சிசேரியன் அறுவைச்சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுள்ளார்.
குழந்தை பெற்று 2 ம் நாளான மே 20 ம் திகதி வைத்தியசாலை வாயிலில் வைத்தே குழந்தையுடன்
கைதுசெய்யப்பட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக UNHCR இல் முறையிடச்சென்ற கணவரிடம் “பதிவுசெய்யமுன் உங்களை யார் குழந்தை பெற்றுக்கொள்ளச்சொன்னது” என பொறுப்பற்ற விதத்தில் பதிலளிக்கப்பட்டுள்ளது, எனினும் 1 வருடத்திற்கும் மேலாக பலமுறை UNHCR அலுவலகம் சென்றும் பதிவுசெய்யாமல் பொறுப்பற்ற விதத்தில் செயல்பட்டது UNHCR அதிகாரிகளே.
1951 ம் ஆண்டு அகதிகளுக்கான வரையறையில் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச மனிதாபிமானத்துடன் கூட இலங்கை அகதிகளை நடாத்த மறுத்து, 2009 இல் தமிழினம் அழியும் வரை பார்த்திருந்து பின்னர் ஐ.நா தவறிளைத்து விட்டதாக அறிக்கை மட்டும் வெளியிட்டது போன்று, மலேசியாவில் உள்ள அகதிகள் அனைவரும் வேட்டையாடப்படும் வரை UNHCR ஆவலுடன் பார்த்துக்கொண்டிருக்கின்றதா என்ற எண்ணமே தோன்றுகின்றது.
தயவுசெய்து இச்செய்தியை படிக்கும் செயற்பாட்டாளர்களும், தமிழர்களுக்கான ஊடகமான தாங்களும் இவ்விடயத்தை பொறுப்பு வாய்ந்த தரப்புகள், மனித உரிமைகள் அமைப்புகளுக்கு எமது அவலம் பற்றி தெரியப்படுத்தி, ஓரளவேனும் எமக்கான தீர்வினைக் காண உதவுமாறு தயவாகக் கேட்டுக்கொள்கின்றோம்.
மலேசியாவிலுள்ள இலங்கை அகதிகள்
refugeerajan@gmail.com