Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை புறக்கணிப்பதாக ஜெயலலிதாவும்,வைகோவும் அறிவிப்பு!

கோவையில் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெறவிருக்கிற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டைப் புறக்கணிக்கபோவதாக அ.இ.அதிமுகவும் அதன் கூட்டணிக்கட்சியான மதிமுகவும் அறிவித்திருக்கின்றன.

இலங்கை மற்றும் மலேசியாவில் தமிழர்களின் அவல நிலையில் வாடும்போது உலகத்தமிழ் மாநாட்டிற்கு அவசியமென்ன என்று வினவும் அ.இ. அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கம் உலகத்தமிழ் மாநாடு நடத்த அனுமதி மறுத்ததாலேயே கருணாநிதி செம்மொழி மாநாடு நடத்துகிறார், 2011ல் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டே தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ளவே அவர் இப்படி மாநாடு நடத்துகிறார், எனவே தனது கட்சி அதனைப் புறக்கணிப்பதாகக் கூறியிருக்கிறார்.

அதைப்போன்ற காரணங்களை சுட்டிக்காட்டி மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் தனது கட்சியும் மாநாட்டைப் புறக்கணிக்கவிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

இரண்டுநாட்களுக்கு முன்புதான் அனைத்து சட்டமன்றக் கட்சித்தலைவர்களுக்கும் மாநாட்டில் பங்கேற்குமாறு முதல்வர் கருணாநிதி அழைப்பு விடுத்திருந்தார்.

உலகத்தமிழ் மாநாடு ஒரு கட்சி சார்பான நிகழ்வாக இல்லாவிட்டாலும், கடந்த காலங்களிலும், எம்.ஜீ.ஆர். மற்றும் ஜெயலலிதா முதல்வர்களாக இருந்தபோது நடத்தப்பட்ட மாநாடுகளில் எதிர்க் கட்சித்தலைவராக இருந்தும் உரிய அழைப்பில்லை எனக்கூறி கருணாநிதி கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version