இலங்கை ரயில்வே திணைக்களம் பெருந்தொகையான ஊழியர்களைத் தற்காலிகமாக வேலைக்கு அமர்த்தியுள்ளது. தனியார் நிறுவனங்கள் ஊடாக வேலைக்கமர்த்தப்படும் இத்தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படுவதில்லை. விடுமுறை நாட்கள் இல்லை. ஓய்வூதியம் நிராகரிக்கப்படுகின்றது. இந்த ஊழியர்கள் சுதந்திர ரயில்வே தொழிலாளர் சங்கம் என்ற தொழிற்சங்கத்தில் இணைந்து தம்மை நிரந்தரமாக்க்கோரிப் போராட்டம் நடத்தினர்.
சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த தொழிலாளர்கள் மீது இலங்கை அரசின் கலகமடக்கும் போலிஸ் பிரிவினர் நேற்று (22.04.2014) கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தினர். கொழும்பின் வாழ்க்கைச் செலவோடு போட்டிபோட முடியாத இத்தொழிலாளர்களின் குடும்பங்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்குவதாக தொழிற்சங்கம் முன்னதாக அறிவித்திருந்தது.
கோட்டைப் புகையிரத நிலையத்தில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டமும் ரயில் மறியல் போராட்டமும் நடத்திய தொழிலாளர்கள் தமது போராட்டத்தைக் கைவிட மறுத்ததைத் தொடர்ந்து போலிஸ் படையினர் அவர்கள் மீது வெறித்தனமாகத் தாக்குதல் நடத்தி ஐந்து பேரைக் கைது செய்தது. இலங்கை அரச சார்பு ஊடகங்கள் பயணிகளைத் தடைசெய்தமையால் ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டனர் என செய்தி வெளியிட்டன. சிங்கள மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என அமெரிக்க ஏகபோக அரசும் அதன் அடியாட்களான விக்னேஸ்வரன் போன்றோரும் ஒப்பாரி வைக்கின்றனர். இதோ, நல்லிணக்கத்தை ஏற்படுத்த பாதை திறக்கப்பட்டுள்ளது. தமிழ்ப் பேசும் மக்களைப் போன்று இலங்கை பாசிச அரசால் ஒடுக்கப்படும் இத் தொழிலாளர்களிடம் நல்லிணக்கத்தைத் தெரிவியுங்கள். அடுத்த தடவை இத்தொழிலார்களோடு வன்னியில் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொள்ளலாம்.