Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

உரிமைப் போராளி கே.ஜி.கண்ணபிரான் காலமானார்.

மக்கள் சமூக உரிமைக் கழகத்தின் (People’s Union for Civil Liberties – PUCL) தலைவராக 15 ஆண்டுகள் இருந்த பிரபல மனித உரிமைப் போராளியும், இந்நாட்டின் தலைசிறந்த வழக்குரைஞராகவும் திகழ்ந்த கே.ஜி.கண்ணபிரான் காலமானார்.

ஆந்திர தலைநகர் ஹைதராபாத்தில் இன்று மாலை 5.00 மணிக்கு அவர் காலமானார். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த கண்ணபிரான், கடந்த 2 மாதங்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று உடல் நிலை மோசமடைந்தது.

81 வயதான கே.ஜி. கண்ணபிரான், மக்கள் சமூக உரிமைக் கழகத்தின் தொடக்க காலத்தில் இருந்தே உறுப்பினராக இருந்து தீவிரமாக பணியாற்றிய மாபெரும் ஜனநாயகவாதியாவார். 1995ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை பி.யு.சி.எல். அமைப்பின் தலைவராக இருந்துள்ளார்.

ஹைதராபாத்தில் வழக்கறிஞர் பணியாற்றி வந்த கண்ணபிரான், முஸ்லீம்களுக்கு 4% இட ஒதுக்கீடு வழங்கி ஆந்திர மாநில அரசு பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அவசியம் குறித்து விரிவாக வாதிட்டார்.

ஆனால் தீர்ப்பு இட ஒதுக்கீட்டிற்கு எதிராக வந்த நிலையில் அவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் எழுதிய கட்டுரையில் முஸ்லீம்கள் இட ஒதுக்கீடு பெறுவதற்கான நியாயத்தை ஆணித்தரமாக வைத்தார்.

தீவிர சிகிச்சைக்கு சென்ற நிலைவரை ஒரு போராளியாகவே வாழ்ந்த பெருமையுடன் மறைந்துள்ளார் கே.ஜி.கண்ணபிரான்.

Exit mobile version