Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல்.

நாவாந்துறைப் பகுதியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் அப்பகுதி மக்கள் மீது நடத்திய தாக்குதல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கிறீஸ் பிசாசு என்ற தோற்றப்பாட்டினை தொடர்ந்து நாவாந்துறையில் இராணுவத்தினரும் பொலிஸாரும் அப்பகுதி வாழ் மக்கள் மீது மேற்கொண்ட தாக்குதல் தொடர்பில் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இருதயநாதன் வீனஸ் றெஜி மற்றும் வில்பிரட் அப்பா ஹில்டா ஆகியோர் சட்டத்தரணி மோஹான் பாலேந்திரா மூலம் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுவில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, யாழ். கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க, பொலிஸ் மா அதிபர் இலங்ககோன், பெண் பொலிஸ் அதிகாரி நதீகா, சட்டமா அதிபர் உட்பட 12 பேர் பிரதிவாதிகளாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

கிறீஸ் பூதம் மீதான குறிப்பிடப்படும் இனந்தெரியாதவர்களினால் வடக்கிலும் இலங்கையின் வேறு பிரதேசங்களிலும் சாதாரண மக்கள் தாக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டும் உள்ளனர். இது மக்கள் மத்தியில் பயப் பிராந்தியை தோற்றுவித்துள்ளது. இதன் விளைவாக இராணுவத்தினரும் பொலிஸாரும் பல நபர்களை கைது செய்துள்ளனர்.

இந்த கிறீஸ் பூதம் என்ற தோற்றப்பாட்டின் பின்னணியில் முக்கியமாக அரசாங்க அதிகாரிகள், கிறீஸ் பூதம் தொடர்பான செய்திகள் பொய்யானவை எனக் கூறியுள்ளனர். பாதுகாப்பு செயலாளர், பாதுகாப்பு படைகளுடன் மக்கள் விளையாடக் கூடாது எனக் கூறியதாக செய்திகள் தெரிவித்துள்ளன.

“கிறீஸ் பூதத்தின்’ தோற்றப்பாட்டுடன் தொடர்புபட்ட நிகழ்ச்சிகளின் பின், தான் ஆகஸ்ட் 22 ஆம் திகதி இரவு 9 மணியளவில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டு எழுந்ததாகவும் 40 50 வரையிலான மக்கள் நாலு சந்தி இராணுவச் சாவடியிலிருந்து நாவாந்துறை சந்தி நோக்கிப் பெரும் ஆரவாரப்பட்டுக் கொண்டு சென்றதாகவும் மனுதாரர் ஒருவர் மனுவில் கூறியுள்ளார்.

அவரது மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “”இரவு 11.30 மணியளவில் தனது வீட்டுக் கதவை யாரோ பலமாகத் தட்டி உள்ளேயிருப்போரை வெளியில் வருமாறு அழைத்தார்.

பின்னர் இராணுவத்தினர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்து என்னையும் தனது சகோதரியின் கணவனையும் வீட்டுக்கு வெளியே இழுத்துச் சென்றனர். எம்மை குழாய்கள், இரும்புக் கோல்கள், தடிகளால் தாக்கினர். பின்னர் எம்மை, நாவாந்துறை சந்தை சந்திக்கு கொண்டு வந்து அங்கு ஏற்கனவே இருந்தவர்களுடன் சேர்த்து விட்டு கண்டபடி தாக்கினர். ஏனைய சிலருடன், என்னையும் ஜீப்பில் ஏற்றி விட்டு ஜீப்பிலிருந்த தள்ளி விட்டனர். பெண் பொலிஸ் கான்ஸ்டபிளான நதீகா, தனது தலையிலும், மார்பிலும் ஆணுறுப்பிலும் சப்பாத்தினால் தாக்கினார். பின்னர், எம்மை பஸ்ஸில் ஏற்றி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையம் கொண்டு வந்து சிங்களத்தில் எழுதப்பட்ட ஏதோ ஒரு ஆவணத்தில் கையெழுத்து வாங்கினர். அடுத்த நாள், எம்மை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் நான் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டேன்.

Exit mobile version