உதயன் பத்திரிகையின் கிளிநொச்சி அலுவலகத்தில் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பணியாளர்கள் மீதும் அலுவலகத்தின் மீதும் இன்று (03-04-2013) அதிகாலை 5.00 மணியளவில் கண்மூடித்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் விநியோகத்திற்காக பத்திரிகையினை எடுத்துச் சென்றிருந்த பணியாளர்கள் இருவரும், அலுவலகத்தில் கடமையில் இருந்த முகாமையாளரும் உதவியாளர் ஒருவரும் படுகாயமடைந்துள்ளதுடன், வாகனம் மற்றும் அலுவலகத்திலிருந்த கணணிகள் மற்றும் தளபாடங்களும் அடித்து நொருக்கப்பட்டு பல இலட்சம் பெறுமதியான அழிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய தாக்குதல்களுக்கு ஓர் முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், ஒட்டுமொத்த தமிழ் தேசத்தின் மீதான அழிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும் சர்வதேச சமூகத்தின் கண்காணிப்பிலும், பாதுகாப்பிலும் தமிழர் தாயகப் பிரதேசத்தில் ஒரு நிலைமாற்று நிர்வாகம் ஒன்றினை உருவாக்கப்பட வேண்டுமென மீண்டும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.குறித்த தாக்குதல் சம்பவத்திவத்தினை தமிழ் தேசிய மக்கள் முன்னணி மிகவும் வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளது.மேலும் அக்கடசி இன்று விடுத்துள்ள அறிக்கையினில் மேலும் தெரிவிக்கையனில் அதி உச்ச இராணுவ பிரசன்னம், மற்றும் இராணுவ கண்காணிப்பு நடவடிக்கைகளால் முடக்கப்பட்டுள்ள கிளிநொச்சி போன்றதொரு இடத்தில் சிறீலங்கா அரசினது ஆசீர்வாதம் இல்லாது இவ்வாறான தாக்குதல் ஒருபோதும் நடைபெற்றிருக்க முடியாது. அந்த வகையில் இந்த தாக்குதலுக்குப் பின்னால் இராணுவத்தினருடைய புலனாய்வுப் பிரிவினரே இருந்திருப்பார்கள் என்ற முடிவைத் தவிர வேறு எந்த முடிவுக்கும் வரமுடியாதுள்ளது.
இந்த சம்பவம் என்பது சர்வதேச சமூகத்தினுடைய கவனம் இலங்கையில் விமர்சன ரீதியாக கூடுதலாக செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் நடைபெற்றுள்ளது. இது சிங்கள பௌத்த தேசியவாத நிகழ்ச்சிநிரலை முன்nகொண்டு செல்வதில் எந்தவொரு அழுத்தத்திற்கும் சிறீலங்கா அரசு அடிபணியப் போவதில்லை என்பதனை நிரூபித்துக் காட்டுகின்றது. தொடர்ச்சியாக தமிழ் இனத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்ற இவ்வாறான தாக்குதல்கள் அனைத்தும், இலங்கைத் தீவில் தமிழர் தாயகப் பிரதேசம் சிங்கள பௌத்த தேசியவாதத்தின் ஆதிக்கத்தினுள் இருக்கும் வரைக்கும் தமிழ்த் தேசிய இருப்பு என்பது எவ்வளவு பெரிய கேள்விக்குறியாக உள்ளது என்பதனை அப்பட்டமாக எடுத்துக் காட்டுகின்றது. இந்த சம்பவங்கள் அனைத்தும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் மிக மோசமான பலவீனங்களை எடுத்துக் காட்டுவதாகவும் அமைந்துள்ளது.
இந்தப் பின்னணியில்; இவ்வகையான தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஒவ்வொரு கட்டங்களிலும் இவற்றை வெறுமனே கண்டிப்பதுடன் நின்றுவிடாது, இவற்றிக்கு முற்றுப் புள்ளி வைக்கக்கூடிய வகையில் தமிழ் அரசியல் தலைமைகள் தெளிவாக கோரிக்கைகளை முன்வைத்து செயற்பட வேண்டும். இதுவே இன்றைய தேவையாகும். பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தரப்பினருக்கே தெரியும், அவ்வாறான பாதிப்புக்களில் இருந்து தப்பித்துக்கொள்ள எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது. இதுவே இயற்கை நியதியாகும்.
அந்த வகையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தொடர்ந்தும் இவ்வாறான தாக்குதல்களுக்கு ஓர் முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், ஒட்டுமொத்த தமிழ் தேசத்தின் மீதான அழிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும் சர்வதேச சமூகத்தின் கண்காணிப்பிலும், பாதுகாப்பிலும் தமிழர் தாயகப் பிரதேசத்தில் ஒரு நிலைமாற்று நிர்வாகம் ஒன்றினை உருவாக்கப்பட வேண்டுமெனக் கோருகின்றது. இந்த உண்மையை அனைத்துத் தமிழ்த் தரப்புக்களும் உணர்ந்து வலியுறுத்த வேண்டுமெனக் கோருகின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது..