Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

உதயன் செய்தி ஆசிரியர் மீதான தாக்குதல்: எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணத்தில் வெளிவரும் உதயன் நாளேட்டின் செய்தி ஆசிரியர் ஞானசுந்தரம் குகநாதன் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊடக அமைப்புகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் கொழும்பில் இன்று செவ்வாய்க் கிழமை நண்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொழும்பு லிப்ரன் சுற்று வட்டத்துக்கு அருகில் நண்பகல் 12.00 மணிக்கு ஆரம்பித்த ஆர்;ப்பாட்டம் 1.00 மணிவரை நீடித்தது.

குகநாதன் மீதான தாக்குதலுக்கு அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசம் எழுப்பினர். பேச்சு சுதந்திரம் கருத்து வெளியிடும் சுதந்திரம் அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்டு மறுக்கப்படுகின்றது. ஊடக சுதந்திரம் இலங்கையில் இல்லை என்று கோசம் எழுப்பிய ஆர்ப்பாட்டக்காராக்ள் குகநாதன் மீதான தாக்குதலுக்கு அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் என்றும் உரக்க சத்திமிட்டனர்.

குகநாதனின் படங்களையும் அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக எழுதப்பட்ட சுலோக அட்டைகளையும் கைகளில் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊடகவியலாளர்கள், ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி உரக்க சத்தமிட்டனர். சுதந்திர ஊடக இயக்கம், உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், ஊடக தொழிலாளர் சம்மேளனம், முஸ்லீம் மீடியா பேராம் ஆகிய ஐந்து ஊடக அமைப்புகள் மற்றும் தொழிற் சங்க பிரதிநிதிகள் எதிர்த்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கண்டனம் கூட்டம் ஒன்றும் இடம்பெற்றது. சுதந்திர ஊடக இயக்கத்தின் எற்பாட்டாளர் சுனில் ஜயசேகர, உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் பதில் தலைவர் ஞானசிறி கொத்திக்கொட, இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் உப தலைவர் அ.நிக்ஸன் ஆகியோர் தாக்குதலை கண்டித்து உரையாற்றினர்.

Exit mobile version