Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

உணவு தண்ணீரின்றி சீனியாமோட்டை காட்டுக்குள் வாடும் கேப்பாபிலவு மக்கள்

கேப்பாபிலவு மக்கள் அவர்களது சொந்த இடத்தில் குடியமர்வதற்கு இராணுவம் அனுமதி மறுத்துள்ளதுடன், கேப்பாபிலவை அண்டியுள்ள சீனியாமோட்டை என்னுமிடத்திலுள்ள காட்டுக்குள் அவர்களை கொண்டு சென்று பலவந்தமாக இறக்கிவிட்டுள்ளனர்.
கடந்த மூன்று வருடங்களாக மணிக்பாம் தடுப்பு முகாமில் அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி இராணுவக் காவலில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கேப்பாபிலவு பிரதேச மக்கள் திடீரென கடந்த 24ம் திகதி அங்கிருந்து இருந்து பலவந்தமாக இராணுவத்தினரால் அச்சுறுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டு தற்போது சீனியாமோட்டை என்னுமிடத்தில் அரைகுறையாக துப்பரவாக்கப்பட்டுள்ள காட்டினுள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நேற்றய தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கNஐந்திரன் அங்கு சென்றபோது அந்த மக்களது அவலநிலையை நேரில் பார்வையிட முடிந்தது.
காட்டுமரங்களின் வேர்களும், கட்டைகளும் நிறைந்த பகுதியிலேயே அந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அங்கு தங்குவதற்கான எந்த அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. தறப்பாள் கொட்டில்கள் கூட அவர்களுக்காக அரசாங்கத்தினால் அமைத்துக் கொடுக்கப்படவில்லை. அங்கு காடுகள் அழிக்கப்பட்டுள்ளபோதிலும் அதன் வேர்கள், கட்டைகள் அகற்றப்படவில்லை. நிலம் மட்டப்படுத்தப்படவில்லை. பாம்புப் புற்றுகள் அழிக்கப்படவில்லை. பற்றைகள் முழுமையாக அழிக்கப்படவில்லை. சுமார் 600 மக்கள் அங்கு இறக்கிவிடப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கிணறுகளோ, குழாய்க்கிணறுகளோ ஒன்று கூட அமைக்கப்படவில்லை. மணிக்; பாம் முகாமில் இருந்து தமது தங்குமிடங்களை பிடுங்கியதில் இருந்து இன்றோடு நான்கு நாட்களாக அவர்கள் எவரும் குளிக்கவில்லை. குடிப்பதற்குக் கூட போதியளவு நீர் அவர்களுக்கு கிடைக்கவில்லை. அந்த மக்களுக்கு பல வாக்குறுகளை அரசு சார்பாக வழங்கிய அரசாங்க அதிகாரிகள் எவரும் இன்றைய தினம் முழுவதும் அந்தப்பக்கம் வரவே இல்லை என்று மக்கள் கூறினர்.
உண்ண உணவு இல்லை, குடிப்பதற்கு நீர் இல்லை, உறங்க வீடு இல்லை. தாகம், பசி, பட்டினியில் வாடுகின்றனர். குடும்பத் தலைவர்களை இழந்துள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் தமக்கான தற்காலிக தங்குமிடங்களைக் கூட அமைக்க முடியாமல் அதரவுக்கு யாருமின்றி கண்ணீர்விட்டுக் கதறியழுகின்றார்கள். வெளியில் இருந்து பொது அமைப்புக்களோ அன்றி அரச சார்பற்ற நிறுவனங்களோ அங்கு சென்று உதவிகள் எதனையும் செய்தவற்கு இராணுவம் இன்னமும் அனுமதிக்கவில்லை.
சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்காக மணிக்பாம் முகாமை மூட வேண்டும் என்பதற்காக பலவந்தமாக வெளியேற்றப்பட்ட மக்கள் அடிமைகள் போன்று சிறீலங்கா இராணுவத்தினரால் நடாத்தப்படுவதனை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். சர்வதேச சமூகம் இம்மக்கள் மீதான இராணுவ நெருக்குவாரங்களை நீக்குவதற்கும் அவர்கள் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டுள்ள இடங்களில் அவர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும், சிறீலங்கா அரசு மீது அழுத்தங்களைப் பிரயோகித்து காலதாமதமின்றி அவர்களை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் கோருகின்றோம். மேலும் புலம்பெயர் தமிழ் மக்கள் இவ்விடயங்களை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டுவருவதற்கு உடன்நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களுக்கான அவசர மனிதாபிமான உதவிகளை வழங்கவும் முன்வரவேண்டும் எனவும் கோருகின்றோம்.

செ.கஜேந்திரன்
பொதுச் செயலாளர்
தமிழ் தேசிய மக்கள் முன்னணி

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தலைவர்

Exit mobile version