Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஈழ மக்களுக்கு உதவிய மூவர் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது – தொடரும் அடக்குமுறை

ஈழ அகதிகள் வெளிநாடு செல்ல உதவியதாக பெரியார் திராவிடர் கழகத்தின் புதுச்சேரி தலைவர் லோகு.அய்யப்பன், வீராம்பட்டினம் கவுன்சிலர் சக்திவேல், காரைக்கால் மாவட்ட பா.ம.க. செயலாளர் தேவமணி உள்ளிட்ட 10 பேரை புதுச்சேரி குற்றப்புலணாய்வு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் நிபந்தனை பிணையில் வெளிவந்து குற்றப்புலணாய்வு அலுவலகத்தில் நாள்தோறும் கையெழுத்திட்டு வருகின்றனர்.இந்நிலையில் காரைக்கால் மாவட்ட பா.ம.க. செயலாளர் தேவமணி, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், வீராம்பட்டினம் கவன்சிலர் சக்திவேல் ஆகியோரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து புதுச்சேரி அரசு சிறையில் அடைத்துள்ளது.

அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கும் நோக்கத்தோடு புதுச்சேரியை ஆளும் காங்கிரஸ் அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்துவதை கண்டித்தும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட மூவரையும் உடனடியாக விடுதலை செய்ய கோரியும் இன்று காலை 10 மணியளவில் பெரியார் திராவிடர் கழகத்தினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இந்த மறியலில் ம.தி.மு.க., பார்வர்டு பிளாக், செந்தமிழர் இயக்கம், தமிழர் தேசிய இயக்கம், நாம் தமிழர் இயக்கம், மண்ணின் மைந்தர்கள் நல உரிமைக் கழகம், அம்பேத்கர் தொண்டர்படை, பெரியார் திராவிடர் விடுதலைக் கழகம், லோக்ஜனசக்தி, புரட்சிப்பாவலர் இலக்கியப் பாசறை, புதுவைக்குயில் பாசறை, செம்படுகை நன்னீரகம், தந்தை பெரியார் பாசறை, மாணவர் நல அறக்கட்டளை, மீனவர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தோழமை அமைப்பினரும் திரளாக கலந்துகொண்டனர். இதனால் கடலூர், விழுப்புரம், திண்டிவனம் ஆகிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட 200 பெண்கள் உள்ளிட்ட 500 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Exit mobile version