இவ்வாற்ப்பாட்டத்தை தலைமையேற்று நடத்திய பெண்கள் விடுதலை முன்னணி, தலைவர் நிர்மலா பேசும் போது, “ஈழ அகதிகள் மீது திட்டமிட்டு நடத்தப்படும் அடக்குமுறை என்பது வரைமுறையின்றி அதிகரிக்கிறது. பொய் வழக்குகள் சோடிக்கப்பட்டு சிறைகளில் வாடும் ஈழ அகதிகளின் நிலை சொல்லி மாளாது. ஈழநேரு, செந்தூரன், சவுந்தரராசன், ஆகியோரை திட்டமிட்டு இலங்கைக்கு அனுப்பப் போவதாக கியூ பிரிவு போலீஸ் தெரிவித்ததை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இங்கு வாழும் அகதிகளின் கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் பறித்து திட்டமிட்டு கொலைகாரன் ராஜபக்சேவிடம் அனுப்பி வைப்பது மிக மோசமான சதிசெயல். பூந்தமல்லி சிறையில் 7 கைதிகளை பாதுகாக்க 160 போலிசு காவல், மாதம் ரூ 34 லட்சம் செலவு, அப்பாவிகளை திட்டமிட்டு தீவிரவாதிகளாகவும் புலிகளாகவும், சித்தரித்து குடும்பத்தை, குழந்தைகளை காண விடாமல் துன்புறுத்தி வருகிறது, இங்குள்ள அகதி முகாம் நிலை மிக மோசமானது. இதை சகித்துக் கொள்ள முடியாமல் உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஆஸ்திரேலியா தப்பிச் சென்று உயிரை இழந்தவர்கள் எத்தனை பேர், தமிழக மீனவர்கள் நடுக்கடலில் நாயைப் போல சுட்டுக் கொல்லப்படுகின்றனர். அதை தடுக்க வக்கில்லாத மத்திய மாநில அரசுகள், ஈழ அகதிகளை காக்காது, நம்மைப் போன்ற புரட்சிகர அமைப்புகள் தான் இதை போராடி பெறவேண்டும்” என்றார்.
கண்டன உரையாற்றிய திருச்சி மாவட்ட மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் செயலாளர், தோழர். ஆதிநாராயணமூர்த்தி பேசுகையில்
“ஈழத்தில் இன அழிப்புப் போரில் அப்பாவி மக்கள் ஆயிரக்கணக்கான பேர் கொல்லப் பட்டனர். தப்பிப் பிழைத்து தமிழகத்தை நோக்கி வந்த அகதிகளின் கொஞ்ச உரிமையையும் பாசிச ஜெயலலிதா பறித்தார். முகாமில் போலீசின் கெடுபிடிகள் ஏராளம், சுதந்திரமாக இருக்க முடியாது, வெளியே வேலைக்கு சென்றவர்கள் 6 மணிக்குள் திரும்பி விட வேண்டும், முகாமில் உள்ள பெண்களை பாலியல் வன்முறை செய்வது, அதை அனுமதிக்கா விடில் கணவன் மேல் வழக்குகள் போட்டு தண்டிப்பது என சிறப்பு முகாம் நிலைமை கொடுமையானது, கஞ்சா, வழிப்பறி, திருட்டு கேஸ் போடுவது என பல வகை சித்திரவதைகளுக்கு மத்தியில் இப்போது நாடு கடத்தப் போவதாக மிரட்டுகிறது. 1951ம் ஆண்டு சர்வதேசிய அறிக்கை நடைமுறை சட்டங்கள், அகதிகளை எப்படி நடத்த வேண்டும் என்பதெல்லாம் நடைமுறைக்கே வரவில்லை,
ஈழநேரு, செந்தூரன், சவுந்தரராசன் இவர்களை உறவினர்களுடன் சேரவிடாமல் சிறப்பு முகாமில் அடைத்து வைத்து சித்திரவதைக்கு ஆளாக்கப்படுகின்றனர். அவர்கள் செய்த குற்றம் என்ன? சிறுமி மீது நடந்த பாலியல் வன்முறையை கண்டித்து போராடினார்கள் என்பதும் கியூபிரிவு போலீசின் மனித உரிமை மீறல்களை உண்ணாவிரதம் இருந்து கண்டித்தார்கள் என்பதுமே, ஆக திட்டமிட்டு ஏவப்படும் இந்த அடக்குமுறைகளை எதிர்த்து போராடுவதற்கு மனித உரிமை பாதுகாப்பு மையம் என்றும் துணை நிற்கும்.”
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியை சேர்ந்த தோழர். ஓவியா பேசுகையில், “3 பேரை கடத்துவதாக கியூபிரிவு கூறியுள்ளது, அடிப்படை காரணம் எதுவுமில்லை, போராட்டம் செய்ததன் விளைவே குற்றம் செய்தவராக கணித்துள்ளது, முள்வேலியின் கொடுமை தெரிவதைவிட சிறப்பு முகாமின் கொடுமைகள் சொல்லி மாளாது, உண்ணாவிரதம் இருந்து தமது உறவினர்களை பார்ப்பதற்கு முயற்சித்தனர். இதைக் கூட செய்யவிடாமல் தடுத்தது, அதன் பின் அவர்களை தற்கொலைக்கு தள்ளி சித்திரவதை செய்தது. தமிழக போலீசு அகதிகளுக்கு இழைக்கும் கொடுமைகளை தகுந்த விசாரணை நடத்தவேண்டும், அதற்க்காக எமது அமைப்புகள் தொடர்ந்து தோள் கொடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.”
சிறப்புரை பேச ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்க சிறப்புத் தலைவர் தோழர்.தர்மராஜ் வந்திருந்தார். ஆனால் மழை பெய்து நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்த முடியாத அளவுக்கு தடைசெய்தது. பொதுமக்கள் கூடி நின்று ஆதரவளித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட முழக்கம்
எத்தனை பேர்! எத்தனை பேர்!
அகதி முகாமின் கொடுமைகளை
சகித்துக் கொள்ள முடியாமல்
ஆஸ்திரேலியா தப்பிச் செல்ல
நடுக்கடலில் உயிர் இழந்த
அப்பாவிகள் எத்தனை பேர்!
பச்சைத் துரோகம், பச்சை துரோகம்
போர்க் குற்றவாளி ராஜபக்சேவிடம்
போராளிகளை திருப்பி அனுப்புவது
பச்சை துரோகம் பச்சை துரோகம்.
இனம் காண்போம்! இனம் காண்போம்!
ஈழத்திலே முள்வேலி!
தமிழகத்தில் சிறப்பு முகாம்
ஈழ மக்களை ஒடுக்குவதில்
ஒன்றுபடும் கயவர்களை
இனம் காண்போம்! இனம் காண்போம்!
வேறல்ல! வேறல்ல!
மத்திய மாநில அரசுகளும்
போர்க் குற்றவாளி ராஜபக்சேவும்
வேறல்ல! வேறல்ல!
தோள் கொடுப்போம்! தோள் கொடுப்போம்!
தஞ்சமடைந்த ஈழமக்களின்
அடிப்படை உரிமையை பெற்றுத் தர
தோள் கொடுப்போம்! தோள் கொடுப்போம்!
தமிழக அரசே! தமிழக அரசே!
குடியுரிமை வழங்கு! குடியுரிமை வழங்கு!
ஈழமக்கள் அனைவருக்கும்
இரட்டை குடியுரிமை உடனே வழங்கு!
அகதி முகாம்கள் என்ற பெயரில்
வதை முகாம்கள் அத்தனையும்
இழத்து மூடு! இழத்து மூடு!
நாடு கடத்தும் சதிசெயலை
கை விடு! கை விடு!
கதையை கேளு! கதையை கேளு!
மழுங்கப் பய மன்மோகனின்
கதையை கேளு! கதையை கேளு!
தமிழ் மக்களை கொன்றொழித்த
போர்க் குற்றவாளி ராஜபக்சேவும்!
சிங்கள இனவெறி அரசும்
நட்பு நாடாம்! நட்பு நாடாம்!
ஆயுதம் தருவானாம், ஆள் அனுப்புவானாம்!
பணம் தருவானாம், பந்தி பரிமாறுவானாம்!
உயிரை இழந்து, உடமை இழந்து
உற்றார் உறவினர், உறவை இழந்து
அகதிகளாய் தஞ்சமடைந்த
அப்பாவி மக்கள் போராடினா!
நாடு கடத்துவானாம்! நாடு கடத்துவானாம்!
கதைய கேளு! கதைய கேளு!
மழுங்கப் பய மன்மோகனின்
கதைய கேளு! கதைய கேளு!
முறியடிப்போம்! முறியடிப்போம்!
மத்திய மாநில அரசுகளின்
நாடு கடத்தும் சதிதிட்டத்தை
முறியடிப்போம்! முறியடிப்போம்!
நாடகம் பாரீர்! நாடகம் பாரீர்!
பாசிச ஜெயாவின் நாடகம் பாரீர்!
போர்க் குற்றவாளி ராஜபக்சேன்னு
தீர்மானம் போட்ட ஜெயலலிதாவே!
கிரிக்கெட் வீரர்களை திருப்பி அனுப்பி
அலப்பரை செய்த ஜெயலலிதாவே!
இலங்கை மீது பொருளாதார தடை
வேண்டுமென சாமியாடிய
மாமி ஜெயாவின் நாடகம் பாரீர்!
துரோகம் பாரீர்! துரோகம் பாரீர்!
சிறப்பு முகாமில் வதைபடும்
ஈழ அகதிகள் 3 பேரை
நாடு கடத்தும் ஜெயாவின்
துரோகம் பாரீர்! துரோகம் பாரீர்!