Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஈழம் பற்றிப் பேச எனக்கு அருகதையில்லை- டாக்டர் ராமதாஸ்.

ஈழப் போராட்டத்தை தங்களின் சுயலாப அரசியல் நோக்கில் ஆதரித்தும், பல சமையங்களில் மௌனம் காத்தும் வந்தவர்கள் தமிழக அரசியல் வாதிகள். கருணாநிதி, ஜெயலலிதா மாதிரியான மக்கள் விரோதிகள் எப்போதுமே ஈழ மக்களுக்கு எதிரானவர்களாகவும் அங்கு நடந்த புலிகளின் ஆயுதப் போராட்டத்தை ஒடுக்கும் சக்திகளோடு சேர்ந்தியங்கும் ஒட்டுண்ணிகளாகவே இருந்து வந்துள்ளனர். இந்த ஒட்டுண்ணி அரசியலில் கருணாநிதிக்கு சற்றும் சளைக்காதவர் டாக்டர் ராமதாஸ். போர் நிறுத்தம் கோரி தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராக பதவியே தஞ்சம் என தன் மகன் அன்புமணியை கடைசி வரை பதவியில் ஒட்டியிருக்க வைத்தவர். தியாகி முத்துக்குமாரின் தீக்குளிப்பின் போது ராமதாஸின் அர்ப்ப நாடகங்களை அப்போது புரிந்து கொண்ட இளைஞர்கள் இந்த சந்தர்ப்பவாத தலைமைகளுக்கு எதிராக போராடினார்கள். ஆனால் இவர்களின் ஏமாற்று நாடகங்களுக்கு முன்னால் அந்த இளைஞர்களின் உணர்வுகள் நீர்த்துப் போயின. தேர்தல், கூட்டணி அரசியல் பதவி, பணம் என ஒரு பச்சோந்தியாக இருக்கும் ராமதாஸ் போரின் போது நடந்து கொண்ட விதங்களை எழுதினால் பக்கம் பக்கமாக எழுத முடியும். இப்போது பெருந்தொகையான மக்கள் கொல்லப்பட்டு தமிழிழக் கோரிக்கைக்கான நியாங்கள் முன்னரை விட பல மடங்கு அதிகரித்து விட்ட நேரத்தில் ஈழம் பற்றிப் பேசத் தகுதி இல்லை என்று அறிவித்திருக்கிறார். நாம் உண்மையில் இவர்களின் அறிக்கையை வரவேற்கிறோம். ஏனென்றால் இந்த சந்தர்ப்பவாதிகளை இனியும் ஈழ மக்கள் நம்பினால் மிச்சம் மீதியிருக்கும் மக்களும் அழிய இவர்களே காரணமாகி விடுவார்கள் என்பதுதான் யதார்த்தம். இந்நிலையில் , திருப்பத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் ராமதாசிடம் இதுகுறித்து கேட்டதற்கு பதில் அளித்த அவர், இலங்கையில் ஈழ நாடே அறிவிக்கப்பட்டு விட்டது. இனி தமிழகத்தில் நான் உட்பட யாருமே அதைப் பற்றி பேச அருகதை இல்லை. இலங்கைக்கு வெளியுறவுத்துறை செயலர் நிருபமா ராவ் சென்று ஒன்றும் ஆகப் போவதில்லை. தமிழர்களுக்கு எந்த நன்மையும் ஏற்பட போவதில்லை. தமிழ் மக்கள் அங்கு நான்காம் தர குடி மக்களாக உள்ளனர். அவர்களுக்கு உரிய அரசியல், அதிகாரம் மற்ற உதவிகள் கிடைக்க உலக நாடுகள் முன் வந்தால் ஒழிய ஒன்றும் செய்ய முடியாது என்றார்.

Exit mobile version