ஈழத்தமிழர் பிரச்னை சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என பூதப்பாண்டியில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பழ.நெடுமாறன் பேசினார். கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவாவின் 104-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் பூதப்பாண்டியில் நடைபெற்றது. நாவலாசிரியர் பொன்னீலன் தலைமை வகித்தார். இந்திய கம்யூ. மாவட்டச் செயலர் சந்திரபாபு முன்னிலை வகித்தார். விழாவில் பங்கேற்ற உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் பேசியதாவது: தமிழை ஆட்சி மொழியாக்க முதன் முதலில் குரல் கொடுத்தவர் ஜீவா. 1967-ம் ஆண்டு சீனா, இந்தியா மீது போர் தொடுத்த போது சீனா கம்யூனிஸ்ட் நாடாக இருந்த போதும் அதற்கு எதிராக குரல் கொடுத்த ஒரே தலைவர் ஜீவா. கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைய நேசமணி போன்ற தலைவர்களுடன் இணைந்து போராடியவர். ஈழத்தமிழர் பிரச்னை வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த உணர்வு வெளிப்படுமானால் ஒவ்வொரு தொகுதியிலும் காங்கிரஸýக்கு சரியான பாடம் கிடைக்கும் என்றார் அவர். கூட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி மாநில துணைத் தலைவர் காசி விஸ்வநாதன், பூதப்பாண்டி பேரூராட்சி துணைத் தலைவர் அனில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.