ஈழப்போர் : சாம்பல் மேடுகளிலிருந்து..
எமது அன்னையர் மண்ணில், ஈழத்தின் இதயத்தில் துடிக்கத் துடிக்கக் கொலைசெய்யப்பட்ட ஆயிரமாயிரம் குழந்தைகளின் புத்திரசோகத்தில் நெஞ்சு பிழந்து அன்னையரை, ஊனமாக்கப்பட்ட சிறார்களை, முதியோரை திறந்தவெளிச் சிறையில் அடைத்து வைத்தது ராஜபக்ச குடும்ப சர்வாதிகாரம். ஊனமுற்ற ஒரு சமூகத்தை உருவாக்கிவிட்டு அபிவிருத்தி குறித்தும் சமாதானம் குறித்தும் பேசிக்கொண்டிருக்கிறது இலங்கை அரசு.
சிறையில் அடைத்துவைக்கப்பட்ட அப்பாவிப் பொதுமக்களின் பெரும்பகுதியினருக்கு என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது. தமிழ்ப் பிரதேசங்கள் இராணுவ மயமாக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. பௌத்த புனிதப் பிரதேசங்கள் தமிழ்ப் பிரதேசங்களை விழுங்கிக் கொண்டிருக்கின்றன. சிங்கள மயமாக்கலும், இராணுவக் குவிப்பும் தான் அறுபது வருட தேசிய இனப்பிரச்சனைக்குத் தீர்வு என்கிறது மகிந்த அரசு.
மே மாதம் பதினெட்டாம் திகதி போர் முடிந்து போய்விட்டதாக நந்திக்கடலைச் சூழ விதைக்கப்பட்டிருந்த மக்களின் பிணங்களின் மேல் ஓங்கி அறைந்து எக்காளமிட்டது பேரினவாதம். சாட்சியின்றி ஒரு மக்கள் கூட்டம் கொன்றொழிக்கப்பட்ட இந்த நாள் உலக வரலாற்றில் இருண்ட நாள். வலுவிழந்த தமிழ் மக்களைப் போல உலகெங்கும் கொல்லப்படும் மரணபயத்தோடு வாழ்கின்ற மக்களின் எதிர்ப்பு நாள். தமிழ் பேசும் மக்களின் பேரினவாதத்திற்கு எதிராகப் போர்முரசு ஒலிக்கவேண்டிய நாள்.
குருதியுறைந்து போன எமது தேசத்தின் சாம்பல் மேடுகளிலிருந்து மக்கள் ஒரு நாள் எழுந்து வருவார்கள். மரண முகங்களோடு அவர்களின் கொல்லைபுறத்தில் குடிகொண்டிருக்கும் சிங்களப் பேரினவாதத்தை வெற்றிகொள்வார்கள். தவறுகளிலிருந்து கற்றுக்கொண்ட மக்கள், மேலாதிக்க நவஞ்சகர்களை மரணித்துப் போன மக்களின் பெயராலும், தியாகிகளின் வலுவாலும் தோற்கடிப்பார்கள்.
மக்களின் வெற்றிக்காக நாம் எம்மாலான அனைத்தையும் வழங்குவோமென உறுதிகொள்வோம்.
தேசிய இன ஒடுக்குமுறையின் கோரத்தீயிலிருந்து மீண்டு புலம் பெயர் நாடுகளில் வாழ்கின்ற ஒவ்வொரு தமிழ் பேசும் மனிதனும் போராட்டத்தின் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ள இந்த சந்தர்ப்பத்தில் முன்வரவேண்டும். எம்மைப் போல சாகடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஆயிரமாயிரம் மக்கள் கூட்டங்களோடு கைகோர்த்துக் கொண்டு, பேரினவாத இலங்கை அரசை முறியடிக்க நாமும் உந்து சக்தியாக அமையவேண்டும்,
மே பதினெட்டாம் திகதியை “ஈழப்போர்” நாளாகப் பிரகடனப்படுத்துவோம். உலகெங்கும் பரந்திருக்கும் ஜனநாயக சக்திகளுக்கும், மனிதாபிமானிகளுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் இலங்கை அரச பாசிசத்தை எதிர்கொள்ள அறைகூவல் செய்வோம்.
–புதியதிசைகள் துண்டுப்பிரசுரம்