மலேஷியாவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 75 ஈழத் தமிழர்களையும் இலங்கையிடம் மலேஷியா ஒப்படைத்து விடக் கூடாது என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுத்து வருகிறது. இதே கோரிக்கையை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் ஏற்கனவே மலேஷியத் தூதரகத்தில் மனுக் கொடுத்திருந்தார் இன்று நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் மலேஷியத் தூதரகத்தில் இதே கோரிக்கையை வலியிறுத்தி மனுக் கொடுத்துள்ளார். முன்னதாக அவர் வெளியிட்ட அறிக்கை,
சிங்கள இனவெறி அரசு தமிழர்கள், குழந்தைகள் உள்பட 75 பேர் தங்களால் இனி இலங்கையில் வாழ முடியாத நிலையில் வேறு ஏதாவது நாட்டிற்கு அகதிகளாகப் போய் பிழைத்துக் கொள்வோம் என்று கப்பலில் தப்பித்து சென்றனர்.ஆனால் அப்படி சென்றவர்களின் படகை மலேசிய காவல் துறையினர் நடுக்கடலில் சுற்றி வளைத்து கைது செய்து தற்போது அவர்களை கோலாலம்பூருக்கு அருகில் உள்ள முகாமில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர். அவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பும் திட்டத்தில் மலேசிய அரசு இருப்பதாக தெரிகின்றது. இது அவர்களை மரணக்குழிக்குள் தள்ளுவதாகும்.நாம் மலேசிய அரசிடம் வைக்கும் கோரிக்கை எல்லாம் எங்கள் தமிழர்களை தங்கள் தாய் நாட்டில் உயிருக்கும், உடமைக்கும் உத்தரவாதம் இல்லாமல் எங்காவது சென்று பிழைத்துக் கொண்டால் போதும் என்று அகதிகளாகச் சென்ற தமிழர்களை அவர்கள் விரும்பினால் உங்கள் நாட்டில் அனுமதியுங்கள். அல்லது அவர்களுக்கு உரிய உணவு, மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்து அவர்களை ஏற்றுக் கொள்ள விரும்பிய நாடுகளுக்கு அனுப்பி வையுங்கள். இதனை பன்னாட்டு சட்டங்களின்படி செய்யாவிட்டாலும் மனிதாபி மான அடிப்படையிலாவது செய்வீர்கள் என்று நம்புகின்றோம். மீண்டும் அவர்களை சிங்கள இன வெறியனிடம் அனுப்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றோம்.நம் தாய்த் தமிழ் உறவுகளின் இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாம் தமிழர் இயக்கம் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மலேசிய தூதரிடம் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு எனது தலைமையில் சென்று மனு கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழினச் சொந்தங்கள் அனைவரும் திரண்டு வந்து தமிழர் வாழ்வுரிமைக்கான இந்தப்பயணத்தில் இணைந்து கொண்டு ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.இந்த கோரிக்கையை வலியுறுத்தி உலகில் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழர்கள் மலேசிய அரசுக்கும், அவரவர் நாட்டில் உள்ள மலேசிய தூதரகங்களுக்கும் மின்னஞ்சல் மூலம் வேண்டுகோள் அனுப்ப வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.அதன்படி இன்று காலை தனது இயக்கத்தினருடன் மலேசிய துணைத் தூதரக அலுவலகத்திற்குச் சென்ற சீமான் அவரிடம் கோரிக்கை மனுவைக் கொடுத்தார்.