Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஈழத் தமிழர்களை அவமானப்படுத்துவதாகும் : சுஷ்மா சுவராஜுக்கு பழ.நெடுமாறன்

ஈழத் தமிழர்களை அவமானப்படுத்த வேண்டாம் என்று தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவாக தமிழ்நாட்டிலிருந்து பழ.நெடுமாறன் அறிக்கை விடுத்துள்ளார். ஈழத் தமிழர்கள் குறித்து அவர்களைத் தவிர அதிகாரத்திலுள்ள அனைவரும் பேசுகிறார்கள்.
இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றுபட்ட இலங்கையை விரும்பும்போது, தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் அங்கு பிரிவினையை ஏற்படுத்த முயற்சி செய்வதாக பா.ஜ.க. நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் குற்றம்சாட்டியிருக்கிறார்.
இலங்கை அரசியலின் கடந்த கால வரலாறு என்ன என்பது தெரியாமலும் எதனால் அங்கு பிரிவினைப் போராட்டம் வெடித்தது என்பதை அறியாமலும் அவர் பேசியிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இலங்கை சுதந்திரம் பெற்றப் பிறகு சிங்களத்தோடு தமிழுக்கும் சமஉரிமையும் சிங்களரோடு தமிழர்களுக்கும் சமஉரிமையும் கேட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாக அறவழியில் தமிழர்கள் நடத்தியப் போராட்டத்தை அடக்கி ஒடுக்க சிங்கள அரசு முயற்சி செய்தது. இந்த நிலைமையில் தமிழ் மக்களின் உரிமைகளை நிலைநாட்ட தமிழீழம் அமைப்பதைத் தவிர வேறு வழியில்லை என தமிழர்கள் 1977ஆம் ஆண்டு முடிவு செய்தனர். அதையே அந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் முன் வைத்தனர். தமிழர் பகுதியில் இருந்த ஒரே ஒரு தொகுதியைத் தவிர அத்தனைத் தொகுதிகளிலும் தமிழர் விடுதலைக் கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதிலிருந்து தொடர்ந்து நடைபெற்ற அத்தனை நாடாளுமன்றத் தேர்தல்களிலும் இதே கோரிக்கைக்கு மக்கள் பேராதாரவு தந்து வந்திருக்கின்றனர். தமிழர் பகுதியில் தமிழீழ கோரிக்கைக்கு எதிரானவர்கள் மக்களால் ஒதுக்கித் தள்ளப்பட்டனர். இந்த வரலாற்றை கொஞ்சமும் தெரிந்துகொள்ளாமல் இலங்கையில் இருந்த சில மணி நேரங்களில் யாரோ சிலரை பார்த்துப்பேசிவிட்டு முடிவு செய்வது எதிர்க்கட்சித் தலைவர் என்ற பெரும் பொறுப்பை வகிக்கும் சுஷ்மா சுவராஜிக்கு அழகல்ல.
கடந்த போர் முடிந்த பிறகு ராணுவக் கட்டுப்பாட்டில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்திய இராசபக்சே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களைத் தோற்கடிக்க வரிந்துகட்டிக்கொண்டு வேலை செய்தார். ஆனாலும் மக்கள் ஆதரவினால் அவர்கள் வெற்றிபெற்றார்கள். சிங்கள அரசோடு இணங்கி அவர்கள் அளித்த அமைச்சர் பதவிகளில் அமர்ந்திருக்கிற தமிழர்கள் வேண்டுமானால் சுஷ்மா சுவராஜ் சொன்னது போல சொல்லியிருக்கலாம். ஆனாலும் அந்த மக்கள் முழுமையாக இன்னமும் தமிழீழ கோரிக்கையை வலியுறுத்தியே வருகிறார்கள்.
தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் எந்தக் கருத்தையும் அந்த மக்கள் மீது திணிக்க முடியாது. அவ்வாறு கூறுவது அந்த மக்களை அவமானப்படுத்துவதாகும். இப்போதும் ஐ.நா. மேற்பார்வையில் அங்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்படுமானால் அந்த மக்களின் உண்மையான விருப்பம் என்ன என்பது வெளியாகும். இந்தக் கோரிக்கையை ராசபட்சேவிடம் வலியுறுத்துவதற்கு சுஷ்மா சுவராஜ் தயாரா? என அவருக்கு அறைகூவல் விடுக்கிறேன்.
இவ்வாறு நெடுமாறன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version