Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம்!:திரளும் புதுக் கூட்டணி!

30.09.2008.

சென்னை: ஈழத் தமிழர்களைக் காக்கக் கோரியும், அவர்கள் மீதான ராணுவ அடக்குமுறையைக் கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் தமிழக அரசியல் அரங்கில் பரபரப்பையும், பல எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.

தேரத்ல் நெருங்க நெருங்க தமிழக அரசியலில் என்னென்ன கூட்டணிகள், எப்படி எப்படி உருவாகப் போகிறதோ என்ற எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டே போகிறது. விஜயகாந்த்துடன் யார் சேருவார்கள், பாமக என்ன ஆகும், கம்யூனிஸ்டுகளை யார் சேர்த்துக் கொள்வார்கள், ஜெயலலிதா என்ன செய்யப் போகிறார், கருணாநிதி மேற்கொள்ளப் போகும் அதிரடி என்ன என்ற ரீதியில் பலப்பல விவாதங்கள் தமிழக மக்களிடையே நடந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் சத்தம் போடாமல் ஒரு நிகழ்ச்சி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்துள்ள உண்ணாவிரதப் போராட்டம்.

இலங்கை ராணுவம் விமானம் மூலமாகவும், தரை வழியாகவும் போர் தொடுத்து, அங்கு வாழும் தமிழ் மக்களை படுகொலை செய்து வருகிறது. லட்சக்கணக்கான தமிழ்மக்கள் தங்கள் உடைமைகளை இழந்து அடிப்படை வசதி ஏதுமின்றி, அங்குள்ள காடுகளில் அகதிகளாக வாழ்ந்து வரு கின்றனர்.

இந்தப் பிரச்சனையில் இந்திய அரசு தலையிட்டு, தமிழர்களுக்கு எதிரான போரை முடிவுக்குள் கொண்டுவர வேண்டும் என்றும், அங்குள்ள தமிழ் அகதிகளுக்கு உணவு, மருந்து உள்ளிட்ட பொருட்களை வழங்க வழிவகை காண வேண்டும் என்றும், வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக வருகிற அக்டோபர் 2ஆம் தேதி காந்தி பிறந்த நாளன்று சென்னையில் உண்ணாவிரதம் நடைபெறுகிறது.

சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே நடைபெறும் இந்த உண்ணாவிரத்தில் தமிழ்நாட்லுள்ள  அனைத்து அரசியல் கட்சிகளும், தமிழர்களுக்கான அமைப்புகளும் பங்கேற்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த அழைப்பை ஏற்று அதிமுக, தேமுதிக, மதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், பல்வேறு தமிழ் அமைப்பு களும் திரையுலகத்தினர் பலரும் இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்கவுள்ளனர்.

சென்னையில் நடைபெறும் உண்ணாவிரதத்தில் அதிமுக சார்பாக அக்கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன். முன்னாள் அமைச்சர்கள் முத்துச்சாமமி, ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்பதுடன், அதே நாளில் மாவட்டத் தலைநகர்களில் நடைபெறும் உண்ணாவிரதத்தில் அந்த அந்தப் பகுதி அதிமுகவினர் கலந்து கொள்வார்கள் என்று அதிமுக தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தேமுதிக தரப்பில் அக்கட்சியின் அவைத் தலைவர் பண்ரூட்டி ராமச்சந்திரன் கலந்து கொள்கிறார். இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலையை முதன் முதலாக உலகின் கவனத்துக்கு கொண்டு வந்தவர் இவர்தான்.

அப்போது 1984ல் தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் எடுத்த முயற்சியின் விளைவாக ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக பண்ரூட்டி ராமச்சந்திரன் பேசி உலகின் பார்வையை இலங்கை பக்கம் திருப்பியவர். எனவே பண்ருட்டியாரின் பங்கேற்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

இதுதவிர, பாமக, மதிமுக, மற்றும் இடது சாரிகள் உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகளும், பழ. நெடுமாறன், திருமாவளவன் உள்ளிட்ட இலங்கை பிரச்சனையின் தீர்வுக்கு பாடுபடும் அமைப்புகளின் நிர்வாகிகளும் கலந்து கொண்டு இலங்கைப் பிரச்சனையின் தீர்வுக்கு மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று   பேசவுள்ளனர்.

இந்த போராட்டத்தில் கிட்டத்தட்ட தமிழகத்தின் முக்கிய கட்சிகள் அனைத்துமே கலந்து கொள்கின்றன. அதிலும் எதிரும் புதிருமாக உள்ள பாமக, அதிமுக, தேமுதிக ஆகியவை ஒரே மேடையில் உண்ணாவிரதம் இருக்கவுள்ளன – ஈழத் தமிழர்களுக்காக.

அதேசமயம், திமுகவும், காங்கிரஸும் மட்டுமே இதில் கலந்து கொள்ளவில்லை. இந்தக் கட்சிகளை கம்யூனிஸ்டுகள் அழைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஈழத் தமிழர்களுக்காக நடைபெறவுள்ள இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் விளைவாக தமிழகத்தில் புதிய கூட்டணி உருவாகுமா என்ற எதிர்பார்ப்பில் தமிழக மக்களும், அரசியல் கட்சிகளும் உள்ளனர்.

Exit mobile version