நீங்கள் வெற்றி முகட்டையும் சிகரங்களையும் தொடுவது இருக்கட்டும், உங்கள் காலடியைச் சற்றே குனிந்து பாருங்கள் உங்கள் இரத்ததின் இரத்தங்களின் இரத்தக்கறை தென்படும். அகற்றமுடியாத கறை! ஐம்பதாயின் தொப்புள்கொடி உறவுகள் உங்கள் வீட்டின் முற்றத்தில் உங்கள் ஆசீர்வாதத்தோடு சாகடிக்கப்பட்ட துயரத்தின் இரத்தக் கறை.
உங்களுக்குத் தெரிவதோ சிறுநரிக் கும்பல் மட்டும் தான். நீங்களும் உங்கள் செம்மொழிம் அறிந்திரா அனைத்துக் கொடிய மிருகங்களும் முள்ளிவாய்க்கால் என்ற மூலைக்குள் ஈழத்தமிழரின் செங்குருதி ஆறாய்ப் பாய்ந்து நந்திகடலை செங்கடலாய் மாற்றிய போது ஒரு ஹைக்கூக் கவிதை கூட வடிக்க முடியாத உங்கள் செம்மொழி அப்போதே செத்துப் போய்விட்டது. நீங்கள் சாகடித்துவிட்டீர்கள்.
நாஓம் சொம்ஸ்கி; ஒரு அமரிக்க அறிஞன்; தமிழே தெரியாத பாவி; அவனே சொல்கிறான், ஒரு மொழியின் ஆழத்தில் அதன் கலாச்சாரத்தின் வரலாற்றுப் பண்பைக் காணலாம் என்று! புற நானூறு கூறும் வீரப்பெண்ணை நான் விளக்கிச் சொல்லவேண்டுமா என்ன? சற்றே நிதனித்துச் சிந்தித்துப் பாருங்கள், புதிய தலைமுறை உங்கள் வீரத்தைப் பறைசாற்றும் என்றா எதிர் பார்க்கிறீர்கள்? செம்மொழித் தலைவனை ஆதரம் காட்டி, நான்கு தலைமுறை கடந்த பின்னர் தமிழ்ப் பண்பாடு கொலைப் பண்பாடு என்றல்லவா கூறப் போகிறார்கள்.
முத்துக்குமார் செத்துப் போன செம்மண் உங்கள் மண். கொடுமைகளைக் கண்டு கொதித்தெழும் நீண்ட வரலாற்றைக்
திரவிடத்தையும் தமிழையும் காரணம் காட்டியே மூன்று தசாப்தங்களைக் சாகடித்துவிட்டு இறுதியில் செம்மொழிக் கூட்டத்திற்குக் கூப்பாடு போடும் நீங்களுமா இந்த வரலாற்றின் வழிவந்தவன்?
முள்ளிவாய்காலில் மாண்டவர்கள் போகட்டும், உங்கள் வியாபரக் கணக்குப் புத்தகத்தில் செலவுப் பகுதியில் எண்ணிக்கையை எழுதிவிடுங்கள். புலிகள் வேறு உயிர்த்திருந்த காலம் என்பதில் தெளிவில்லாமலே கணக்கு முடித்திடலாம். மக்களே வாழமுடியாத வனாந்தரத்தில், காட்டாறுகூட எட்டிப்பார்க்காத கட்டாந்தரையில் முகாம்கள் என்ற பெயரில் உங்கள் செந்தமிழர்களைச் சிறைவைத்துச் சித்திரவதை செய்கிறார்களே, குள்ள நரிக்கும்பல் இயம்பிய செம்மொழிக் கவிதைகள், வீரத் தமிழன் உங்கள் நரம்புகளை முறுக்கேற்றவில்லையா?
புழுக்களே ஊர்ந்து செல்லத் தயங்கும் முகாம் மண் தரையில், கல்விமான்களும், கலாநிதிகளும்,செந்தமிழர்களும் கைகட்டி அமர்ந்திருக்க உங்கள் நண்பன் ராஜபக்சேயின் சிப்பாய் துப்பாக்கியோடு சொகுசு நாற்காலியில் அமர்ந்து அரசியல் பாடம் கற்பிக்கும் காட்சியைத் தூது கொண்டுவரவா ஈழத்துச் சிவத்தம்பி தேவைப்படுகிறார்.?
சிறுநரிக் கும்பலின் காலில் விழுந்து கிடக்கும் விபீஷணக் கூட்டத்தைப் பற்றிக் குறை பட்டுக் கொள்கிறீர்கள். அதெல்லாம் இதிகாசக் கதை கலைஞரே! மக்கள் இப்போதெல்லாம் எட்டப்பர் கூட்டத்தைப் பற்றியல்லவா பேசிக்கொள்கிறார்கள்! அந்தக் கூட்டத்திற்கெல்லாம் சிறுநரிக் கும்பலின் கால்கள் போதாது.. விழுந்துகிடக்க! ராஜபக்சேயின் கால்களிலல்லவா விழுந்து கிடக்கிறார்கள்!!
நாளைய உங்கள் இரத்தத்தின் இரத்தங்களின் சந்ததி செம்மொழியையும் எட்டப்பர்களையும் முடிச்சுப் போட்டா தமிழை எடை போடவேண்டும்?
ஈழத்துச் சிவத்தம்பி வருகிறாரோ இல்லையோ, தமிழ் மொழியையும் அதன் வரலாற்று மரபையும் செம்மொழி மாநாடு நடத்தியும் சாகடிக்கமாட்டீர்கள் என நம்புவோம்.
உங்கள் இன்னொரு இரத்தம்
செந்தமிழன்.