இலங்கை அரசு சர்வதேசத்திடம் கூறுவதுபோல் போரினால் இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் முழுமையாக மீளக்குடியமர்த்தப்படவில்லை. வன்னியில் எங்கும் புத்தர் சிலைகள் நிறுவப்பட்டு, பௌத்த கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.
மலேசியாவில் இருந்தும், இந்தியாவில் இருந்தும் இலங்கைக்குப் பயணம் செய்து திரும்பிய குழுவினர் நேற்று சென்னையில் நடை பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இந்தத் தகவல்களை தெரிவிக்கையில் ,
இலங்கையில் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம், 19ஆம் திகதிகளில் நடந்த போருக்குப் பின் தமிழ் மக்களின் சமூக அரசியல், பொருளாதார, பண்பாட்டுச்சூழல் எப்படியிருக்கிறது என்பதை அறிய ஐவர் குழு தமிழகத்தில் இருந்து இலங்கை வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்குச் சென்றது.
இலங்கை அரசு சர்வதேச சமூகத்திடம் சொல்வது போல அங்கு ஒன்றுமில்லை.பாதிக்கப்பட்ட மக்களை முழுமையாக மீள்குடியமர்த்தி விட்டோம் என்பதெல்லாம் உண்மையில்லை என்பதை நேரடியாகக் கண்டு உணர முடிந்தது. மேலும் யுத்தகளத்தில் தமிழர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாயினர். குறிப்பாக பெண்களும், குழந்தைகளும் பாதிக்கப்பட்டனர்.
30 ஆண்டுகால போரினால் 90 ஆயிரம் பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டுள்ளனர். 40 ஆயிரம் பேர் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர்.
ஒவ்வொரு குடும்பத்திலும் ஏதாவது ஒரு உயிரிழப்பு அல்லது ஒருவர் உடல் உறுப்பு பாதிக்கப்பட்டவராக இருக்கின்றார்.
முகாம்களில் அடைத்து வைக்கப்பட்ட எல்லோரும் முழுமையாக மீள் குடியமர்த்தப்படவில்லை. இன்னும் இரண்டு பெரிய முகாம்கள் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளன என்றுள்ளது.
சோமாலியா போன்ற நாடுகளில் கூட இவ்வாறான அவலத்தைக் காணவில்லை எனத் தெரிவிக்கின்றனர்.