Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஈழத்தின் முக்கிய இலக்கியவாதி மாவை வரோதயன் காலமானார்.

தேசியகலை இலக்கியப் பேரவை
44, 3ஆம் மாடி,

 கொழும்பு மத்திய சந்தைத் தொகுதி,

 கொழும்பு 11. தொலைபேசி 011-5024358

ஊடகங்களுக்கான செய்திக்குறிப்பு

                                                              மாவை வரோதயன்
                                                            (12.9.1965 – 29.08.2009)

தேசிய கலை இலக்கியப் பேரவையின் செயற்குழு உறுப்பினராக எம்மோடிணைந்து செயலாற்றிவந்த கவிஞருங் கட்டுரையாசிரியரும் விமர்சகரும் நாடகாசிரியரும் ஆர்வலருமான ஈழத்தின் முக்கிய இலக்கியவாதிகளுள் ஒருவருமான மாவை வரோதயன் எனும் பேரால் இலக்கிய உலகம் அறிந்த சி. சத்தியகுமாரன் அவர்களது பிரிவுச் செய்தி தேசிய கலை இலக்கியப் பேரவையை மிகுந்த துயரில் ஆழ்த்தியுள்ளது.

செயலூக்கமிக்க ஒரு உறுப்பினராகத் தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் நீண்ட காலம் இணைந்து அதற்கு ஆதரவாயிருந்து அதன் நிகழ்ச்சிகட்கு உறுதுணையாய்ச் செயற்பட்டு ஊக்குவித்ததில் அவரது பங்களிப்பு மிக முக்கியமானது. தேசிய கலை இலக்கியப் பேரவையின் சஞ்சிகையான தாயகத்தின் ஆசிரியர் குழுவில் ஊறுப்பினராக அயராது செயற்பட்டு வந்ததுடன் தனக்கேயுரிய பண்பான நகைச்சுவையுணர்வுமிகும் ஆக்கங்களாற் தாயகத்துக்கு வளமூட்டினார்.

அவரது கவிதைகளும் உரைச் சித்திரங்களுங் கட்டுரைகளும் நாடகப் பிரதிகளும்  தெளிவும் ஆழமும் சமூகப் பயனுமுடையவை. தனது பல்வேறு தனிப்பட்ட துன்ப துயரங்கட்கிடையிலுங், குறிப்பாகக் கடந்த சில மாதங்களாகக் கடுமையான நோய்க்கு உட்பட்டிருந்த போதுந், தன்னாலியன்றளவுக்கு தாயகத்திற்துத் தனது பங்களிப்பைத் தொடர்ந்தும் வழங்கி வந்தார். சமூகச் சிந்தனை மிக்க சீரிய படைப்பாளிகள் பிற்போக்காளராற் காழ்ப்புணர்வுடன் நிந்திக்கப்பட்ட வேளைகளில், நிதானந் தவறாது உண்மைகளை விளக்கி அவதூறுகளை நிராகரித்துப் புதிய கலை இலக்கியப் பண்பாட்டை நிலை நிறுத்தும் ஓர்மம் அவரிடம் இருந்தது. அவரது பிரிவு தமிழ் இலக்கிய உலகிற்கும் சமூக விடுதலைச் சிந்தனையாளர்கட்கும் ஒரு பேரிழப்பாகும்.

அவரது பிரிவால் வருந்தும் அவரது மனைவியார் அவர்கட்கும் பிள்ளைகட்கும் குடும்பத்தினருக்கும் தேசிய கலை இலக்கியப் பேரவை தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் அவருக்கான இறுதி அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்வதில் அவருடைய நண்பர்களுடனும் உறவினர்களுடனும் இணைந்து, தனது ஆழ்ந்த துயரை அவர்களுடன் பகிர்ந்து கொள்கிறது.

       சோ.தேவராஜா
       பொதுச் செயலாளர்
       தொ.பேசி – 0778851989

Exit mobile version