Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஈழத்தமிழர்கள் மீது கலைஞர் விதித்துள்ள சொத்துத் தடை: தலைகுனிவுக்குரியது

கருணாநிதியை உலகத் தமிழர்களின் தலைவன் என்ற நிலையில் இருந்து தரமிறக்கியுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இந்தவகையில் தமிழகத்தில் ஈழத்தமிழர்கள் மீது கலைஞரின் அரசாஙக்ம் விதித்துள்ள சொத்துத் தடை குறித்து தமிழக முதலமைச்சர் கலைஞர் முத்துவேல் கருணாநிதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருக்கும், மலையக மக்கள் முன்னணியின் தலைவர் – அமைச்சர் பெ.சந்திரசேகரன், தமிழ்நாட்டில் அடைக்கலம் புகுந்துள்ள ஈழத்தமிழர்கள் மீது கலைஞர் விதித்துள்ள சொத்துத் தடை, புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களை திகிலடைய வைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேற்குலக நாடுகளில் அகதித் தஞ்சம் கோரிய ஈழத்தமிழர்கள் மீது, இற்றைவரைக்கும் எவ்விதமான சொத்துத் தடைகளையும் மேற்குலக அரசுகள் விதிக்காத நிலையில், ஷமரத்திலிருந்து வீழ்ந்தவனை மாடேறி மிதித்த கதை| போன்று, ஈழத்தமிழர்களின் மனதை நோகடிக்கும் வகையில் கலைஞர் நடந்து கொள்வதாகவும், அமைச்சர் பெ.சந்திரசேகரன் கண்டனம் வெளியிட்டுள்ளார். ஈழத்தமிழர்கள் மீது கலைஞர் முத்துவேல் கருணாநிதி விதித்துள்ள சொத்துத் தடை, உலகத் தமிழர்களின் தலைவன் என்ற நிலையில் இருந்து அவரைத் தரமிறக்கி, அருவருப்புக்கும், தலைகுனிவுக்கும் உரிய ஒருவராக, அனைத்துத் தமிழர்களும் கருதும் நிலைக்கு வழிகோலும் என்றும, அமைச்சர் பெ.சந்திரசேகரன் எச்சரித்துள்ளார். தமிழகத்தில் நிலம், வீடு அல்லது மோட்டார் வாகனங்கள் வாங்கியிருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகள் குறித்த விவரங்களை தமிழக அரசு சேகரிக்கத் தொடங்கியிருககிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் மாநாட்டில் பேசிய முதல்வர் கருணாநிதி, அகதிகள் இவ்வாறு சொத்துகள் வாங்குவது குற்றம், அனுமதிக்கப்படக்கூடாது, உண்மையான அகதிகளுக்கு வேண்டிய உதவிகள் செய்யலாம், ஆனால் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் அவர்கள் ஈடுபடக்கூடாது எனக் கூறியிருந்தார். எனினும் ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழக நிறுவனர் சந்திரஹாசன், இலங்கைத் தமிழர்கள் தமிழகத்தில் சொத்துகளை சில நியதிகளுக்கு உட்பட்டு வாங்கமுடியும் எனத் தெரிவித்தார். ரேஸன் கார்டு அல்லது வாக்காளர் அட்டை போன்றவற்றை அகதிகள் பெறுவதாகக் கூறப்படுவது தவறு எனத் தெரிவித்த அவர், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் ஆனால் இலங்கைத் தமிழர்கள் நலனை பாதிக்கும் வகையில் தமிழக அரசு நடந்துகொள்ளாது என தாம் நம்புவதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version