Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஈரானைத் தாக்க ஜார்ஜியா தளமாகும் : அமெரிக்க சதி குறித்து ரஷ்யா எச்சரிக்கை

20.09.2008.

மாஸ்கோ:
ஈரான் மீது போர் தொடுப்பதற்குரிய ராணுவத் தளமாக ஜார்ஜியாவைப் பயன்படுத்த அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது என்று நேடோவுக்கான ரஷ்ய தூதர் டிமிட்ரி ரோகோசின் எச்சரித்துள்ளார்.

ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை ஜார்ஜியாவில் இருந்து நடத்த தேவையான ராணுவ தயாரிப்புகளில் அமெரிக்கா இறங்கி விட்டது என்று ரஷ்ய உளவுத்துறை சேகரித்த தகவல்கள் கூறுகின்றன என்று அவர் சொன்னார்.

ஜார்ஜியா விமான நிலையங்களை அமெரிக்காவிடம் ஒப்படைக்க ஜனாதிபதி சாகஸ் விலி சம்மதித்து விட்டதால் அவருடைய ஆட்சியை ஏன் அமெரிக்கா உயர்வாக மதிக்கிறது என்பதற்கு காரணம் கிடைத்து விட்டது.

ஈரான் மீது போர் தொடுக்க ஜார்ஜியா மிகவும் வாகான இடம் என்று அவர் கூறினார். அமெரிக்காவின் ராணுவ சூதாட்டத்துக்கு ஜார்ஜியாவைப் பலி கொடுக்க சாகஸ்விலி தயாராகி விட்டார் என்றும் அவர் சொன்னார்.

தெற்கு ஒசெட்டியா மீது ஜார்ஜியா ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு அமெரிக்கா ராணுவ உதவி அளித்தது.

ரஷ்யாவுடன் நடத்திய போரில் ஜார்ஜியா இழந்த ஆயுதங்களை ஈடு கட்ட தேவையான ஆயுதங்களை உதவிப் பொருட்களை ஏற்றி வந்த கப்பலில் அமெரிக்கா கொண்டு வந்ததாக ரஷ்யா கூறுகிறது.

ஜார்ஜியாவின் ஒசெட்டியா படையெடுப்பை ரஷ்யா முறியடித்து விட்டதால், ஜார்ஜியா விமான தளங்களை பயன்படுத்தி ஈரானைத் தாக்கும் அமெரிக்கத் திட்டம் செயலற்று விட்டது.

ஜார்ஜியாவைப் பயன்படுத்தி இஸ்ரேலும் ஈரானைத் தாக்கலாம் என்றும் ஒரு தகவல் உள்ளது.

இஸ்ரேலும் ஏராளமான ஆயுதங்களை ஜார்ஜியாவுக்கு அளித்துள்ளது. இஸ்ரேல் ராணுவ பயிற்சியாளர்கள் ஜார்ஜியா படை வீரர்களுக்கு பயிற்சி அளித்துள்ளனர்.

 

Exit mobile version