18.11.2008.
வாஷிங்டன்: ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் திரும்பப் பெறப்படும் என்றும், ஆப்கானிஸ்தானில் அல்கொய்தா மீது தாக்குதல் தீவிரப்படுத்தப்படும் என்றும் அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாரக் ஒபாமா கூறியுள்ளார்.
ஜனவரி 20ம் தேதி அவர் அதிபராக பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில் அதிபராக வெற்றி பெற்ற பிறகு முதல் முறையாக அவர் பேட்டி அளித்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
பொருளாதார சீர்குலைவில் இருந்து அமெரிக்காவை மீட்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் திரும்ப பெறப்படும். இதுகுறித்து தேசிய பாதுகாப்புத் துறை அதிகாரிகளை அழைத்து பேசுவேன். மேலும் ஆப்கானிஸ்தானில் அல்கொய்தா மீதான தாக்குதல் தீவிரப்படுத்தப்படும்.
அல்கொய்தா தீவிரவாத அமைப்பு முற்றிலுமாக ஒழிக்க முக்கியத்துவம் அளிக்கப்படும். ஒசாமா பின்லேடனை உயிருடனோ, பிணமாகவோ பிடிப்பது அமெரிக்க படைக்கு கடினமாகவே உள்ளது.
சர்ச்சைக்குரிய குவான்டநாமோ சிறைச்சாலை மூடப்படும் என்றார்.
சிறை மூடப்பட்ட பின்னர் அந்த சிறையில் உள்ள கைதிகள் எங்கு மாற்றப்படுவார்கள் என்பது குறித்து அவர் கூறவில்லை.