Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஈ.என்.டி.எல்.எப்.- இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் சந்திப்பு.

ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.)யின் உயர்மட்டக் குழு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு. எம்.கே. நாராயணன் அவர்களை திங்கள்கிழமை (13-04-2009) புதுடெல்லியில் சந்தித்து முல்லைத்தீவில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் யுத்தத்தை நிறுத்த இந்தியா உடனடியாக தலையிட வேண்டுமென கேட்டுக்கொண்டது.

சுமார் ஒருமணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்பின் போது, இலங்கை தமிழர் பிரச்சினை தற்போது ஒரு தீவிரமான கட்டத்தை அடைந்துள்ளது என்றும் தமிழர்; நீதியானதும் நியாயமானதுமான கோரிக்கைகளை பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும், தற்போது இந்தியாவிற்கு கிடைத்திருக்கும் இறுதி சந்தர்ப்பம் எனவும் குழுவினர் வலியுறுத்தினர்.

இந்திய தேசிய பாதகாப்பு ஆலோசகருடன் ஈழ தேசிய ஜனநாய விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.) உயர்மட்டக் குழுவினர் கையளித்த மகஜரில், சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ள இரண்டு நாள் போர் ஓய்வு பலன் எதனையும் ஏற்படுத்தப் போவதில்லை என்று சுட்டடிக்காட்டப்பட்டது. விடுதலைப் புலியினர் இந்தக் காலக்கட்டத்தில் போரில் சிக்கியுள்ள இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் பொதுமக்களை அரசத் தரப்புப் பகுதிகளுக்கு செல்ல அனுமதிக்கப் போவதில்லை என்றும், போர்ப்பகுதியில் சிக்கியுள்ள தமிழ் பொதுமக்கள் கூட அரசத் படையினரின் தடுப்பு முகாம்களுக்குள் செல்ல விரும்பமாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் இருந்து அரசப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் தமிழர்களை இடமாற்றுவது இந்தக் கட்டத்தில் ஏற்புடையது அல்ல என்றும் மகஜரில் சுட்டிக்காட்டப்பட்டது.

இன்றைய காலகட்டத்தில் உடனடியான நிரந்தர யுத்த நிறுத்தம் வேண்டுமென வலியுறுத்திய ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.)யின் உயர்மட்டக் குழுவினர் யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து, வன்னியில் போரில் அகப்பட்டுள்ள இரண்டு லடச்சத்து ஐம்பதாயிரத்துக்கும் (2,50,000) மேற்பட்ட பொதுமக்கள் மீள குடியமர்த்தப்பட வேண்டுமெனவும் அதன் பின்னர் அமைதிப் பேச்சுக்கள் ஒருங்கிணைந்த ஈழத் தமிழர் தலைமையுடன் இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழ் நடத்தப்பட வேண்டுமென இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரை கேட்டுக்கொண்டனர்.

ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்தியா நேரடியாகவே தலையிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.) உயர்மட்டக் குழுவினர் பின்வரும் தங்களது ஆலோசனைகளை தமது மகஜரில் தெரிவித்துள்ளனர்.

(01) இலங்கையின் வடக்கில் நடைபெறும் தற்போதைய யுத்தத்தில் இந்தியாவின் நேரடி தலையீடும், இந்திய அமைதிப்படையினரின் மேற்பார்வையில் நிரந்தர யுத்தநிறுத்தமும் வேண்டும்.

(02) முல்லைத்தீவில் தற்போது சிக்குண்டுள்ள பொதுமக்கள், முல்லைத்தீவில் அல்லது வடஇலங்கையில் அந்த மக்கள் விரும்பும் இடங்களில் இந்தியாவின் அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் அமைப்பின் மேற்பார்வையில் மீள குடியமர்த்தப்பட வேண்டும்.

(03) இலங்கை அரசினால் தற்போது வவுனியாவிலும் ஏனைய இடங்களிலும் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வன்னியிலிருந்து தப்பி வந்த பொதுமக்கள் இந்தியாவின் அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் அமைப்பின் மேற்பார்வையில் அமைக்கப்படும் புனர்வாழ்வு முகாம்களுக்கு மாற்றப்படுவதுடன் இலங்கை அரசினால் நடத்தப்படும் தற்போதைய முகாம்கள் மூடப்பட வேண்டும்.

(04) அகதி முகாம்களில் தங்கவைக்கப்படும் தமிழ் பொதுமக்களை இலங்கை இராணுவத்தினரும் பொலிசாரும் அணுகுவதும் அவர்களை கட்டுப்படுத்துவதும் முற்றாக நீக்கப்பட வேண்டும்.

(05) இலங்கை அரசுக்கும் ஒருங்கிணைக்கப்பட்ட ஈழத் தமிழர் தலைமைக்கும் இடையே தமிழர் பிரச்சினையை இறுதியாக முடிவுக்குக் கொண்டுவர குறித்த கால எல்லைக்குள் நடத்தி முடிக்கத்தக்கதான பேச்சுவார்த்தைகள் இந்தியாவின் தலைமையின் கீழ் நடைபெற வேண்டும்.

(06) ஈழத் தமிழர்களுக்கான நிரந்தர தீர்வின் ஒரு அங்கமாக தற்போது போரில் ஈடுபட்டுள்ள விடுதலைப் புலியினரை போர் தவிர்ப்பு ஒன்றில் ஈடுபடுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

(07) வட-கிழக்கில் இதுவரை ஏற்பட்ட யுத்தத்தினால் இடம்பெயர்ந்த எல்லா மக்களும் அவர்கள் முன்னர் குடியிருந்த இடங்களில் மீளவும் குடியமர்த்தப்பட வேண்டும்.

ஈழத் தமிழர்களுக்கான நிரந்தர தீர்வு தொடர்பாக ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் (ஈ.என்..டி.எல்..எப்.) நிலைப்பாட்டை எடுத்துக் கூறிய உயர்மட்டக் குழுவினர் ஈழத் தமிழர்கள் சுயநிர்ணய உரிமை கொண்ட மக்கள் என்பதை எப்போதுமே வலியுறுத்தி வந்திருப்பதாக தெரிவித்தனர்.

இந்தியாவினால் ஏற்பாடு செய்யப்பட்ட திம்பு மகாநாட்டில் சகல தமிழ் கட்சிகளும் குழுக்களும் ஒருமித்து ஏற்றுக்கொண்ட திம்பு கோட்பாடுகள் எந்தவொரு இறுதித் தீர்விலும் அங்கீகரிக்கப்பட வேண்டும். ஆயினும் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியும் அதே போன்று பல ஈழத் தமிழ் அரசியல் குழுக்களும், நாடு பிரிவினைக்குட்படாத வகையில் திம்பு கோட்பாடுகள் உள்ளடக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றனர்.

இறுதி தீர்வு ஏற்படுவதற்கு இடைபட்டக் காலக்கட்டத்தில் 1987ஆம் ஆண்டில் இந்திய அரசினால் ஏற்படுத்தபபட்ட “இலங்கை-இந்திய” ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒன்றிணைந்த வடகிழக்கு மாகாணங்களுக்கு நிர்வாக அலகு ஒன்று ஏற்படுத்தபட வேண்டுமெனவும் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் உயர்மட்டக் குழுவினர் தமது மகஜரில் தெரிவித்தள்ளனர்.

Exit mobile version