இவ்வேளையில் விடுதலைப் புலிகளின் முன்நாள் முக்கியஸ்தர் இளந்திரையன் உயிரோடிருப்பதற்கான சான்றுகள் இருப்பதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ள கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஜனாதிபதி ஆணைக்குழு சனிக்கிழமை கிழக்கு மாகாணத்தில் தனது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இதில் விடுதலைப் புலிகளின் முன்னாள் படைத் துறை பேச்சாளரான இளந்திரையன் அல்லது மார்ஷல் எனப்படும் இராசையா சிவரூபனின் மனைவி உட்பட விடுதலைப் புலி முக்கியஸ்தர்களின் மனைவிமார்களும் சாட்சியமளித்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட செயலக மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த இராசையா சிவரூபனின் மனைவி வனிதா சிவரூபன், 2009 ம் ஆண்டு மே மாதம் 17 ம் தேதி தனது கணவர் இராணுவத்தினரால் காயத்திற்கு சிகிச்சையளிக்க வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதாகக் கூறி அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அதன் பின்னர் தனது கணவனைப் பற்றிய தகவல்கள் இல்லை.” என தெரிவித்தார்.
கணவன் இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டு சில நாட்களின் பின்பு முகாமில் தங்கியிருந்தபோது, அங்கு சி.ஐ.டி. என தம்மை அறிமுகப்படுத்தி வந்த இருவர் கணவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறி தங்களை அழைத்துச் செல்ல வந்த போதிலும் தாம் மறுத்து விட்டதாகவும் தெரிவித்தார் வனிதா சிவரூபன்.