Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இளந்தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் அருணபாரதி தாக்கப்பட்டார் : தி.மு.கவினர் வெறியாட்டம்

இளந்தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி உள்ளிட்ட மூன்று தோழர்கள் மீது தி.மு.கவினர் கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்று இரவு 11.30 மணி அளவில், தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழின் அலுவலகம் அமைந்திருந்த சென்னை தியாகராயர் நகர் பகுதியில் பத்திரிக்கை ஊழியர்கள் இருவர் பத்திரிக்கையின் சுவரொட்டிகளை ஒட்ட, தோழர் அருணபாரதி உடன் சென்றிருந்தார்.
அந்தச் சுவரொட்டிகளில் ‘செம்மொழி மாநாடு செய்தது என்ன?’’, ‘இந்தியாவே வெளியேறு’ ஆகிய பத்திரிக்கையில் இடம் பெற்றிருந்த கட்டுரையின் தலைப்புகள் இருந்தன. அப்போது, அங்கு திடீரென வந்த தி.மு.கவினர், ‘தலைவர் கலைஞரின் செம்மொழி மாநாட்டைக் குறை சொல்ல நீங்க யாரு?’ என்று கேள்வி எழுப்பியும் தகாத வார்த்தைகளால் திட்டியும் வம்பு வளர்த்தனர். தோழர் க.அருணபாரதி அவர்களிடம் பதில் கூற முற்பட்டபோது, தோழா;கள் கொண்டு சென்றிருந்த மிதிவண்டியை தூக்கி வீசி சேதப்படுத்தினர். பின்னர் தோழர்கள் நாகராஜ், பாலா ஆகியோரைத் தாக்கியுள்ளனர். தோழர் நாகராஜ் திருப்பித் தாக்க முற்பட்டபோது, அருகே இருந்த மண்வெட்டியைத் தூக்கிக் கொண்டு ஓடி வந்த தி.மு.கவினரில் ஒருவர் அவரை வெட்ட முற்பட்டார். தோழர் அருணபாரதி குறுக்கே புகுந்து அவரைத் தள்ளிவிட்டு தோழர் நாகராஜைக் கொலைவெறித் தாக்குதலில் இருந்து காத்தார்.
இதனால் கோபமுற்ற தி.மு.கவினர், தோழர் அருணபாரதியையும் தாக்கினர். தாக்கிய பின் அக்கும்பல், தமிழர் கண்ணோட்டம் சுவரொட்டிகளைக் கிழித்து எறிந்தது. தி.மு.க தலைவர் கருணாநிதியை விமர்சித்தால் கொலை செய்துவிடுவோம் என்று எச்சரித்தனர். அங்கிருந்து தப்பி வந்த தோழர்கள் மேற்கு மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். காவல்துறையினர், முதலில் புகாரை ஏற்பதில் தயக்கம் காட்டினர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் உடனடியாகத் தலையிட்டு மேற்கு மாம்பலம் காவல் துறை ஆய்வாளர் திரு. விஸ்வநாத் ஜெயன் அவர்களிடம் பேசிய பின்னர், புகார் பதிவு செய்யப்பட்டது.
மாற்றுக் கருத்துக் கொண்டோர் மீது தாக்குதல் நடத்துவது தி.மு.கவின் வழக்கமாக உள்ளது. தமிழர் கண்ணோட்டம் இதழும் இளந்தமிழர் இயக்கமும் தமிழ்த் தேசிய அரசியலில் சமரசமின்றிப் போராடி வருகின்றன. குறிப்பாக தி.மு.க தலைவர் கருணாநிதியின் தமிழின விரோத நடவடிக்கைகளை எதிர்த்துக் களம் கண்டு வருகின்றன. இதைச் சகித்துக் கொள்ள முடியாத தி.மு.கவினர் கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறான நடவடிக்கைகள் தி.மு.கவின் தமிழின விரோதப் போக்கை மேலும் அம்பலப்படுத்துமே தவிர, தமிழினத்தில் அக்கட்சிக்கு நற்பெயர் கிடைக்க வழிவகுக்கப் போவதில்லை.
தாக்குதல் நடத்திய கொலை வெறியர்களைத் தமிழக அரசு உடனடியாகக் கைது செய்ய வேண்டும். தி.மு.க தலைமை இச்சம்பவத்திற்கு மன்னிப்பு கோர வேண்டும்.
இதுபோன்ற போக்கை தி.மு.கவினர் நிறுத்த வேண்டும். இதுகுறித்த தொடர் பரப்புரைகளில் ஈடுபட்டு தி.மு.கவின் தமிழின விரோத அடியாள் அரசியலை அம்பலப்படுத்தும் பணியை இளந்தமிழர் இயக்கம் முன்னெடுக்க உள்ளது. உலகெங்கும் வாழும் இன உணர்வாளர்கள் இப்பணியில் இளந்தமிழர் இயக்கத்துக்குத் துணை நிற்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
தோழமையுடன்,
ம.செந்தமிழன்தலைமைக் குழு – இளந்தமிழர் இயக்கம்

சென்னை, 11.08.2010.

Exit mobile version