Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை மாற்றமொன்றை எதிர்பார்க்கிறது! – லயனல் போபகே

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட யுத்த வெற்றியின் பின்னர் தனது அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொண்ட தற்போதைய ஜனாதிபதி 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வழங்கிய மகிந்த சிந்தனை உறுதிமொழிகளை காலால் எட்டி உதைத்துவிட்டு பொது மக்களை முழுமையாக மறந்துவிட்டு தனது குடும்பத்திற்கு முன்னுரிமை வழங்கி செயற்பட்டு வருகிறார்.

ஊழலும், குடும்பமும் அரசசாட்சி செய்வதுடன் ஊடக சுதந்திரம் உள்ளிட்ட மக்களின் ஜனநாயக உரிமைகள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளன. நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவைக் குறைக்க எந்த வேலைத் திட்டங்களும் முன்வைக்கப்படவில்லை. தற்போதைய ஜனாதிபதியை பதவியில் அமர்த்திய தென்பகுதி மக்கள் தாங்க முடியாத வாழ்க்கைச் சுமையைச் சுமக்கின்றனர்.

தமது குழந்தைகளின் உயிர்களைத் தியாகம் செய்து யுத்தத்தின் பின்னர் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு குறையும் என அவர்கள் எண்ணினர். தாம் எதிர்நோக்கும் ஏனைய சமுக பொருளாதாரப் பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டுவந்து நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் மக்கள் கொண்டிருந்தனர். இதற்காக வரலாற்றில் என்றும் ஏற்படாத சந்தர்ப்பம் ஏற்படும் என அவர்கள் எண்ணியிருந்தனர். தமிழ் மக்கள் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் ஊடான அரசியல் தீர்வு செயற்படுத்தப்படும் என நினைத்தனர்.

ஜனாதிபதி இந்த சகல எதிர்பார்ப்புக்களையும் வீணடித்துள்ளார்.
மக்களைத் தவறாக வழிநடத்துவதற்காக ஏகாதிபத்திய சூழ்ச்சிகள் குறித்து கருத்துக்களை வெளியிட்டுவரும் அவர் சர்வதேச ரீதியில் புறந்தள்ளப்பட்டிருக்கும் ஜனநாயக விரோத நிர்வாகிகளோடு கைகோர்த்துக் கொண்டுள்ளார். இதில் நாட்டில் எதிர்காலப் பொருளாதாரத்திற்கும் அமைதிக்கும் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும்.

கடந்த மூன்று வருடங்களில் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக ஊழியர்கள் என 34 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். 10 பேர் கடத்திச் செல்லப்பட்டனர். திஸ்ஸநாயகம் தொடர்ந்தும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சித்திரவதைகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக 50க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனர்.

நாட்டின் சட்டமும், அமைதியும் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதுடன் அரசியல் தேவைகளுக்காக காவல்துறை, இராணுவம், வன்முறைக் குழுக்கள் மற்றும் அரச ஊடகங்கள் என அனைத்தும் பயன்படுத்தப்படுகிறது. தற்போதைய ஜனாதிபதியைத் தோற்கடிப்பதற்காக எதிர்க்கட்சிகளினால் களமிறக்கப்பட்டுள்ள பொது வேட்பாளரினால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிக்கப்படுதல், ஜனநாயகத்தை மீண்டும் ஸ்தாபித்து அதனை உறுதிப்படுத்துவது, ஊழல் மோசடிகளை இல்லாதொழித்து குடும்பவாதத்தை தடுத்து நிறுத்துதல் போன்ற பல்வேறு உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ளன.

அரசியல்வாதிகளினால் மீறப்பட்ட இவ்வாறான உறுதிமொழிகள் குறித்த அனுபவத்தைக் கொண்டுள்ள மக்கள் இந்த பொது வேட்பாளரின் உறுதிமொழிகள் குறித்து நியாயமான சந்தேகத்துடனேயே பார்க்கின்றனர். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பது நாட்டிலுள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையப் போவதில்லை. இந்தப் பிரச்சினையில் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்கும் கட்சிகள் கூட முரண்பாடான கொள்கைகளைக் கொண்டுள்ளன. எனினும், இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காகவும் அதற்காக அணித் திரண்டு அழுத்தங்களை ஏற்படுத்தும் வகையில் ஜனநாயக வரையறையைக் கட்டியெழுப்ப வேண்டியது இன்றைய அத்தியாவசியத் தேவையாக எழுந்துள்ளது.

அரசியல் கட்சியொன்றின் உறுப்பினர் அல்லாத ஒருவர் வரலாற்றில் முதன்முறையாக பொது வேட்பாளராக போட்டியிடுகிறார்.

அதிகாரத்திற்கு வந்தபின்னர் நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் பெற்றுள்ள மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து செயற்பட வேண்டிய நிலை அவருக்கு ஏற்படும்.

ஜனநாயகத்தை மதிக்கும் பிரிவினர் அவரை சூழ்ந்துகொண்டுள்ளனர்.

தற்போது நடைமுறையிலுள்ள அரசியலமைப்பை நிறைவேற்றியவர்களே அதில் மாற்றம் செய்ய முன்வந்துள்ளனர்.

நிறைவேற்று அதிகாரத்தை நாடாளுமன்றத்திற்கு வழங்குவதற்காக பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்கும் சகலரும் இணக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.

இவ்வாறான நிலைமையை ஏற்படுத்த வாய்ப்புக்கள் ஏற்படும் என நாம் எண்ணுகிறோம்.

இந்த நிலைமையை ஏற்படுத்த வேண்டுமானால் சகல முற்போக்குச் சக்திகளும் அணி திரளவேண்டும். இவ்வாறு அணி திரள்வதன் மூலமே மக்களின் வெற்றி தீர்மானிக்கப்படும். இது முடிவுறாத போராட்டமாகும். 1948ம் ஆண்டு முதல் மக்கள் சக்தியைக் கட்டியெழுப்பவதற்காக நாம் பெற்றிருந்த அனுபவங்களை மறந்துவிடக் கூடாது.

இதனால் தற்போதைய மக்கள் விரோத நிர்வாகத்தைத் தோற்கடித்து மக்கள் சக்தியை கட்டியெழுப்புவதற்காக சகல பிரஜைகளும் முன்வரவேண்டும்.

நம் முன்நிற்கும் மாற்று நடவடிக்கைகள் மூலம் மக்கள் விரோத ஊழல் நிறைந்த நிர்வாகத்தை உறுதிப்படுத்த வாய்ப்பளிக்க மாத்திரமே முடியும். இந்தச் சந்தர்ப்பத்தில் இந்த நிர்வாகம் தன்னை உறுதிப்படுத்துவதை தவிர்க்க முடியாது. இவ்விதமான செயற்பாடுகள் சகல இனங்களுக்கும் அழிவை ஏற்படுத்தக் கூடிய பலன்களைக் கொண்டுவரும் என்பது எமது பலமான நம்பிக்கையாகும்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இடதுசாரி தலைவர்கள் சரியானது என நினைப்பதைத் தெரிவித்தாலும், மக்கள் சக்தியை கட்டியெழுப்பக் கூடிய அடிப்படையான மற்றும் கவர்ச்சிகரமான முனைப்புக்களை அவர்களால் மேற்கொள்ள முடியாது என்பது தெளிவானதாகும்.

இன்று நாடு எதிர்நோக்கியிருக்கும் நிலைமையானது எமது எதிர்கால சந்ததியினருக்கு ஆபத்தானது என நினைப்பார்களாயின் நாட்டில் மாற்றமொன்றை ஏற்படுத்த வேண்டியது கட்டாயமாகும்.

இழக்கப்பட்டுள்ள ஜனநாயக உரிமைகளை மீண்டும் நாம் பெற்றுக்கொள்வதற்காக இந்தச் சந்தர்ப்பம் ஒரு தீர்மானமிக்க சந்தர்ப்பமாக அமைந்துள்ளது.

இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் அனைவரும் மிகவும் முக்கிய பொறுப்பொன்றை நிறைவேற்றக் கூடிய சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது.

இதனால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனாதிபதியொருவரைத் தெரிவுசெய்வதற்காக மனசாட்சிக்கு இணக்கலாக வாக்குகளைப் பயன்படுத்தும் போது மேற்கூறிய விடயங்களைக் கருத்திற்கொள்ள வேண்டியுள்ளது.

Exit mobile version