இலங்கை அரசாங்கத்தினாலும், தமிழீழ விடுதலைப் புலிகளினாலும் மேற்கொள்ளப்பட்ட பாரிய மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை உறுப்பு நாடுகள் உதாசீனமான போக்கையே கடைபிடித்து வருவதாக மனித உரிமை கண்காணிப்பகத்தின் சட்டத்துறைப் பணிப்பாளர் ஜூலியட் டி ரிவைரோ தெரிவித்துள்ளார்.
இலங்கை விவகாரத்தில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை உருவாக்கப்பட்டதன் முக்கிய நோக்கத்தைவிட்டு விலகிச் செயற்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கை விவகாரம் குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நடைபெற்ற விவாதம் மற்றும் வாக்கெடுப்பு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இலங்கையினால் முன்வைக்கப்பட்ட உத்தேச யோசனைத் திட்டம் 17 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட போதிலும், மனிதாபிமான பாதிப்புக்கள் குறித்து மனித உரிமைகள் பேரவை உரிய முறையில் கவனம் செலுத்தவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் நிர்வாகம் செய்யப்படும் அகதி முகாம்களில் கைதிகளைப் போன்று நடத்தப்படும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை எவ்வித கவனமும் செலுத்தாமை வேதனையளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகளை நிலைநாட்டக் கூடிய அரிய சந்தர்ப்பத்தை பேரவை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ளவில்லை என கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது.