
இன்று (10.04.2012) லண்டன் இலங்கைத் தூதரகத்தின் முன்பாக நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பட்டத்தில் தமிழ், சிங்கள புலம்பெயர் மக்கள் கலந்து கொண்டனர். ராஜபக்ச பாசிச அரசிற்கு எதிராக முழகங்களை முன்வைத்து நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பட்டம் தமிழர்களும் சிங்களவர்களும் இணைந்து இலங்கை அரசிற்கு எதிராக நிகழ்திய குறிப்பிடத்தக்க நிகழ்வாக முக்கியத்துவம் பெறுகிறது. முன்னிலை சோசலிசக் கட்சியைச் சேர்ந்த திமுத்து மற்றும் பிரேம்குமார் ஆகியோர் மகிந்த அரச படைகளால் கடத்தப்பட்ட நிலையில் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பட்ட்டம் அவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையிலும் இடம்பெற்றது. இலங்கை அரச பாசிசத்திற்கும், வெள்ளைவான் ஜனநாயகத்திற்கும் எதிரான சுலோகங்கள் முன்வைக்கப்பட்டன. நிகழ்வின் இறுதியில் முன்னிலை சோசலிசக் கட்சி, தமிழ் சொலிடாரிட்டி. எம்.பிஸ், புதியதிசைகள் ஆகிய அமைப்புக்களைச் சார்ந்தவர்கள் உரை நிகழ்த்தினர்.
பிரேம்குமார் திமுது ஆகியோர் விடுதலை செய்யப்பட்டது மக்கள் குரலின் வெற்றி என்றும் குறிப்பாக இலங்கையில் மக்கள் பலத்தில் தங்கியிருந்த முன்னிலை சோசலிசக் கட்சியினரின் அர்ப்பணம் மிக்க உழைப்பின் வெற்றி என்றும் புதிய திசைகள் சார்பில் உரை நிகழ்த்தியவர் குறிப்பிட்டார். தவிர, தமிழ் மக்கள் மீதான் பேரினவாத பாசிசத்தின் கோரத்தை இப்போது சிங்கள மக்களும் உணர ஆரம்பித்துவிட்டனர். தமிழ் சிங்கள ஒடுக்கப்பட்ட மக்களின் இணைவு இலங்கை அரச பாசிசத்தை அழிக்கும் என மேலும் குறிப்பிட்டார். முன்னிலை சோசலிசக் கட்சியின் சார்பில் உரையாற்றியவர்கள் இலங்கையில் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டம் தொடரும் எனக் குறிப்பிட்டார்.