Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை நடத்திய போர் வெறியாட்டம்: ஆவணப்படமாக டெல்லியில் வெளியிடப்பட்டது

channel4இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில், அப்பாவி தமிழர்கள் மீதும், விடுதலைப்புலிகள் மீதும் சிங்கள ராணுவம் நடத்திய போர் வெறியாட்டம், நேற்று டெல்லியில் ஆவணப்படமாக வெளியிடப்பட்டது. இலங்கை அரசு போர்க்குற்றங்கள் செய்ததற்கான மேலும் சாட்சியங்களும், ஆதாரங்களும் இதன் மூலம் வெளி உலகத்துக்கு அம்பலமாகி உள்ளது.

இறுதிக்கட்டப்போர்

இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாடு கேட்டுப் போராடி வந்த விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே 26 ஆண்டுகளாக கடும் சண்டை நடந்து வந்தது. இந்தப் போர் கடந்த 2009–ம் ஆண்டு இறுதிக் கட்டத்தை அடைந்தது. அந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த இந்தப் போரில் அப்பாவி பொது மக்கள் உள்பட 40 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பேர் வரை பலியானார்கள். விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டவர்களும் இதில் அடக்கம்.விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், அவரது வீரர்கள், வெள்ளைக்கொடி ஏந்தியபடி சரண் அடைய வந்த வீரர்கள் ஆகியோரும் கொல்லப்பட்டது தான் கொடூரம் ஆகும். இது பற்றிய ஆவணப்படங்களை, இங்கிலாந்தைச் சேர்ந்த ‘சேனல்–4’ தொலைக்காட்சி பலமுறை வெளியிட்டு உலகையே அதிர வைத்தது.

பிரபாகரனின் 12 வயது மகன் கொடூரக்கொலை

சில நாட்களுக்கு முன்னர் இந்த தொலைக்காட்சி, ரத்தத்தை உறைய வைக்கும் மேலும் ஒரு கொடூரக் காட்சியையும் வெளியிட்டது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரனை, சிங்கள படைகள் பிடித்து வைத்து, சாப்பிடுவதற்கு சில உணவுகளை கொடுத்து, பின்னர் அவனை நெஞ்சில் நேருக்கு நேர் சுட்டுக்கொன்ற காட்சி தான் அது.உலகத்தையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகிய இந்த காட்சி, இலங்கை மீது போர் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் மனித உரிமை ஆர்வலர்களுக்கு மேலும் ஒரு சாட்சியமாக அமைந்தது.

புதிய ஆவணப்படம்

இலங்கை அரசு தமிழர்கள் மீது நடத்திய போர் வெறியாட்டம் தொடர்பான ஆவணப்படம் (டாக்குமெண்டரி சினிமா) ஒன்றை ‘சேனல்–4’ தொலைக்காட்சி தயாரித்து உள்ளது. ‘நோ பையர் சோன்’ (தாக்குதல்கள் நடத்தக்கூடாத பகுதிகள்) என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட இந்த சினிமா நேற்று டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப் என்ற அரங்கில் திரையிடப்பட்டது. சர்வதேச பொது மன்னிப்பு சபையின் இந்திய கிளை, அமைதிக்கான நோபல் பரிசுக்கு உரியவர்களை பரிந்துரைக்கும் குழுவும் இதற்கு ஏற்பாடு செய்து இருந்தது.‘இலங்கையின் கொலைக்களம்’ என்ற பெயரில் 2 ஆவணப்படங்களை தயாரித்து வெளியிட்ட டைரக்டர் கெல்லம் மெக்கரேதான் இந்த படத்தையும் தயாரித்து, டைரக்டு செய்து உள்ளார். தாக்குதல்கள் நடத்தக்கூடாத பகுதிகளில், சிங்கள ராணுவம் அத்துமீறி கொடூர தாக்குதல்களை நடத்தி, பல்லாயிரக் கணக்கான மக்களை ஈவு இரக்கம் இன்றி கொன்று குவித்ததால், இந்த சினிமாவுக்கு ‘நோ பையர் சோன்’ என்று மெக்கரே பெயரிட்டு உள்ளார்.

டைரக்டர் விளக்கம்

படம் தொடங்கியதும், டைரக்டர் மெக்கரெ தோன்றி, போர்க் காட்சிகள் குறித்து விளக்கம் அளிக்கிறார். பின்னர், காண்போர் கண்களை குளமாக்கி, கண்ணீர் வரவழைக்கும் போர்க்காட்சிகள் வெளியாகின்றன.போர் நடத்தக்கூடாத பகுதி என்று அறிவிக்கப்பட்ட இடங்களிலும், பாதுகாப்பான பகுதி என்று அறிவிக்கப்பட்ட இடங்களிலும் சிங்கள ராணுவம் கொத்துக் கொத்தாக குண்டுகளை வீசும் கொடூரக் காட்சிகள், ஊரெங்கும், அப்பாவி மக்கள் உயிர் இழந்து சடலங்களாக கிடக்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.தாயும், குழந்தையும் ஒன்றாக வீழ்ந்து கிடக்கும் நெஞ்சை உறையச் செய்யும் காட்சி, ஆஸ்பத்திரிகளில் நூற்றுக் கணக்கானோர் உடலின் பல பாகங்கள் சிதைந்த நிலையில் சிகிச்சை பெறுவது போன்ற நெஞ்சை பதற வைக்கும் காட்சிகளும் இடம் பெற்று உள்ளன.

உச்சக்கட்ட கொடூரம்

அப்பாவி பெண்கள் ஆடைகள் களையப்பட்டு, நிர்வாணமாக சுட்டுக் கொல்லப்பட்டிருக்கும் காட்சி, சிங்கள ராணுவத்தின் உச்சகட்ட கொடூரத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. மேலும், பெண் புலிகள் என்ற சந்தேகத்தில், ஏராளமான பெண்களை ஒரு லாரியில் ஏற்றி சிங்கள ராணுவத்தினர் கொண்டு செல்கிறார்கள். ஆனால், அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரிய வில்லை.சிங்கள ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான கர்னல் ரமேஷ், மன்றாடுவதும், அவரிடம் ஏதோ வாக்குமூலம் வாங்கும் காட்சியும், பின்னர் அவர் கொல்லப்பட்டு, முகம் சிதைந்த நிலையில் பிணமாக கிடப்பதும் காட்டப்படுகிறது.

இசைப்பிரியாவை சீரழித்த காட்சி

பெண் புலிகளில் தளபதியாக இருந்த இசைப்பிரியாவை சிங்கள ராணுவம் சீரழித்து, படுகொலை செய்த காட்சியும் இடம் பெற்று உள்ளது.போரில் இடம் பெயர்ந்த தமிழர்கள் நிராதரவாக திறந்த வெளியில் அவதியுறுவது, கொத்துக்குண்டு வீச்சில் பலியானவர்களின் உடல்கள் அப்புறப்படுத்த முடியாமல் சிதறிக்கிடந்த காட்சிகளும், குண்டு மழையால் பீதி அடைந்த மக்கள் கைக்குழந்தைகளுடன் வேறு இடங்களுக்குச் செல்வது ஆகிய காட்சிகளும் இந்த சினிமாவில் காட்டப்படுகின்றது.

தடை செய்யப்பட்ட கொத்துக்குண்டுகள்

உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளை சிங்கள ராணுவம் பயன்படுத்தியதும், அதனால், அப்பாவி தமிழ் மக்களின் உயிர் கொத்துக் கொத்தாக பறிக்கப்பட்டதும் இந்த சினிமாவில் காட்டப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 20 நிமிடங்கள் ஓடும் இந்த ஆவண சினிமா, மனித உரிமை ஆர்வலர்கள் மட்டுமல்லாது, ஒட்டு மொத்த உலகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.இந்த சினிமாவில் இடம் பெற்று உள்ள பதை பதைக்கச் செய்யும் காட்சிகள், இலங்கையில் போர் குற்றம் நடந்ததற்கு மேலும் ஒரு உறுதியான ஆவணமாகவும், இலங்கை மீது போர்க்குற்ற நடவடிக்கை எடுக்க வலுவான சாட்சியங்களாக இருக்கும் என்று டைரக்டர் மெக்கரே தெரிவித்தார்.அடுத்த மாதம் ஜெனிவாவில் நடைபெற உள்ள ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்திலும் இந்த சினிமா திரையிடப்பட உள்ளது.

Exit mobile version