Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை தொடர்பான கருத்துக்களை வெளியிடும் இணையத்தளங்களை முடக்கலாம் : உச்ச நீதிமன்றம்

இலங்கையில் இயங்கி வரும் இணைய தளங்கள் தொடர்பாக பூரண விசாரணை நடத்தப்பட வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இணைய தளங்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் பொறுப்பு இலங்கை தொலைத் தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஊடக அமைச்சில் இணைய தளங்களை பதிவுக்கு உட்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நீதிமன்றம் அறிவித்துள்ளது.

முடக்கப்பட்ட ஆறு இணைய தளங்களையும் இலங்கைப் பயனாளிகள் பார்வையிடுவதில் காணப்படும் தடைகளை நீக்க முடியுமா என அவதானிக்குமாறும் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

ஸ்ரீலங்காமிரர் என்ற இணைய தளத்தினால் உச்ச நீதிம்றில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பான விசாரணைகளின் போது இந்தப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

குறித்த இணைய தளத்தின் உரிமையாளர் கே.எஸ். ரொட்ரிகோ என்பவரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதவான்களான கே. ஸ்ரீபவன், சத்யா ஹெட்டிகே மற்றும் பிரியசாத் ஆகியோரினால் இந்த மனு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது.

முடக்கப்பட்ட இணைய தளங்கள் அவுஸ்திரேலியாவில் பதிவு செய்யப்பட்டவை என தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணையகத்தின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.

இணைய தளத்தின் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி சாலிய பீரிஸ் ஆஜராகியிருந்தார்.

தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணையகம், அதன் பணிப்பாளா அனுஷ பெல்பிட்ட, தகவல் ஆணையாளர் பேராசிரியர் ஆரியரட்ன அதுகல, ஊடக அமைச்சின் செயலாளர் டபிள்யூ.பி. கனேகல மற்றும் சில தொலைதொடர்பு நிறுவனங்கள் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மூன்று மொழிகளிலும் பக்கச்சார்பற்ற வகையில் கட்டுரைகள் வெளியிடப்பட்டு வந்ததாக இணையத்தளத்தின் சார்பில் ஆஜனரான சட்டத்தரணி சாலிய பீரிஸ் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படக் கூடிய வகையில் தகவல்கள் வெளியிடப்படவில்லை எனவும், கடந்த நவம்பர் 5ம் திகதியிலிருந்து இணைய தளம் முடக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

முன் அறிவித்தல் இன்றி இணைய தளத்தை முடக்கியமை அதன் பணியாளர்களது அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Exit mobile version