Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை தூதுவர் அம்சாவிடம் சன்மானம் பெறும் ஊடகவியலாளர்களும் இருக்கிறார்கள்!:கார்ட்டூனிஸ்ட் பாலா.

  ஈழத் தமிழர்களுக்கான கொடுமைகள், இலங்கையின் அடக்குமுறைகளுக்கு எதிராக செய்தி வெளியிட்ட செய்தியாளர் திசநாயகத்துக்கு இலங்கை நீதிமன்றம்  வழங்கிய 20 ஆண்டுகால கடும் சிறைத் தண்டனை தீர்ப்பினை கண்டித்து ‘சுதந்திரமான ஊடகங்களுக்கு எதிரான இலங்கை அரசின் ஒடுக்குமுறை’ எனும் தலைப்பில் சென்னையில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது.

தியாகராய நகர் வெங்கட் நாராயண சாலையில் அமைந்துள்ள தெய்வநாயகம் பள்ளியில் ‘Save Tamil’ என்னும் தகவல் தொழில்நுட்ப இளைஞர்களால் இக்கண்டனக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

திசநாயகத்துக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டுகால சிறைத் தண்டனையை உடனடியாக ரத்து செய்து அவருக்கு நிபந்தனை அற்ற விடுதலை வழங்கக் கோரியும், ஈழத் தமிழர்கள் அடைக்கப்பட்டிருக்கும் முகாம்களுக்குள் அனைத்துலக ஊடகங்களை அனுமதிக்கக் கோரியும்,  இலங்கை அரசின் ஊடக ஒடுக்குமுறையைக் கண்டித்தும் இந்தியாவின் முன்னணி செய்தியாளர்கள் பலரும் கலந்துகொண்டு பேசினர்.

 ‘தி வீக்’ இதழின் செய்தியாளர் கவிதா முரளிதரன்:

இலங்கையில் போர் நடந்து கொண்டிருந்தபோது தமிழ்நாட்டில் ஏராளமான போராட்டங்கள் நடந்தன. ஆனால் அவற்றுக்கு மதிப்பளிக்கும் மனநிலையில் ஆளும் தரப்பில்லை.

ஆனால் போருக்குப் பின்னர் மூன்று லட்சம் மக்கள் முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். ஊடகவியலாளர்கள் கொல்லப்படுகிறார்கள், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள் என்கிற சூழலில் ஏதோ சாதித்து முடித்து விட்ட மாதிரி இங்கே அமைதியாக இருக்கிறார்கள்.

என்னதான் நாம் பேசினாலும் எழுதினாலும் தமிழ்நாட்டு மக்கள் போராடவில்லை என்றால் இலங்கையில் எதுவுமே நடக்கப் போவதில்லை. மக்கள் ஈழத் தமிழர்களின் வாழ்வுக்காக போராட முன்வரவேண்டும் என்றார்.

 
இந்திய- தமிழக உளவுத் துறை சதி…

‘டெக்கான் குரோனிக்கல்’ நாளேட்டின் செய்தியாளர் பீர் முகம்மது பேசுகையில்,

அமெரிக்காவின் முக்கியமான மருத்துவரும் மனித உரிமை ஆர்வலருமான டொக்டர் எலின் சாண்டஸ் இலங்கையில் உள்ள முகாம்களை ஜெர்மனியின் நாஜி முகாம்களோடு ஒப்பிட்டுள்ளார்.

அவர் வரும் 15 ஆம் நாள் தொடங்கி 20 ஆம் நாள் வரை இனப் படுகொலைக்கு எதிராக தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தார்.

இதற்காக அவர் நியூயார்க்கில் இருக்கிற இந்திய தூதரகத்தில் விசாவும் பெற்றிருந்தார். ஆனால் தனது பிரச்சார பயணம் தொடர்பாக தமிழ்நாடு காவல்துறையிடம் பத்து நாட்களுக்கு முன்னர் அனுமதி கோரியிருந்தார்.

ஆனால், அவருக்கு பத்து நாட்களாக அதற்கான காவல்துறை அனுமதி கிடைக்கவில்லை என்பதோடு இந்த பத்து நாட்களில் நியூயார்க்கில் இருக்கிற இந்திய தூதரகம் அவருக்கு வழங்கியிருந்த விசாவை ரத்தும் செய்து விட்டது.

இதிலிருந்து தமிழ்நாட்டு காவல்துறையும் இந்திய உளவுத் த்துறையும் எப்படியெல்லாம் ஈழ மக்களுக்காக இங்கே பேசுவதை திட்டமிட்டு தடுக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

இங்கே இருக்கிற மாநில முதல்வரோ அங்கே சுமூக நிலை நிலவுகிறது என்கிறார். இது வேதனையான பேச்சு என்றார்.

ஆங்கில ஊடகங்களுக்கு அக்கறையில்லை…‘நக்கீரன்’ இதழின் உதவி ஆசிரியர் லெனின் பேசுகையில்,

 

போர் நடந்தபோது தமிழ் ஊடகவியலாளர்களும் பல்வேறு அரசியல் சக்திகளும் போர் நிறுத்தம் கேட்டு போராடினார்கள். ஆனால் ஆங்கில ஊடகங்கள் இதில் அக்கறை இல்லாமல் நடந்து கொண்டார்கள்.

உண்மையில் அவர்கள் நினைத்திருந்தல் இலங்கை விவகாரத்தில் ஏதாவது ஒரு நெருக்கடியை ஏற்படுத்த முடியும். அதிகார மையங்களுக்கு நெருக்கமான ஆங்கில ஊடகங்கள், குறிப்பாக தமிழ்நாட்டில் இருக்கும் ஆங்கில ஊடகவிலாளர்கள் இன்னும் அதிக கவனம் எடுத்து இலங்கை விவாகரத்தில் செயல்பட வேண்டும் என்றார்.

‘இலங்கை தூதரகத்தின் கைக்கூலிகள்…’

கார்ட்டூனிஸ்ட் பாலா பேசுகையில், இலங்கையில் உண்மைக்காக பேசிய ஊடகவியளார்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

ஆனால், தமிழ்நாட்டில் உண்மை பேசக்கூடாது என்பதற்காக இலங்கை தூதுவர் அம்சாவிடம் சன்மானம் பெறும் ஊடகவியலாளர்களும் இருக்கிறார்கள்.

போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் அவர்கள் கொடுத்த அன்பளிப்புக்களுக்காக இனத்தையே காட்டிக் கொடுத்து துரோகம் செய்து விட்டார்கள். பல நேரங்களில் இதை நினைக்கும்போது அருவருப்பாக இருக்கிறது.

தமிழ் ஊடகவியலாளர்கள்தான் இப்படி என்றால்… ஆங்கில ஊடகங்களோ தமிழ்நாட்டு தமிழ் மக்கள் மீது ஒரு போரையே தொடுத்தன.

இலங்கை அங்கே தமிழர்களைக் கொன்றார்கள். இங்குள்ள ஆங்கில ஊடகவியளார்களோ போரின் முடிவை பெரும் வெற்றியாக கொண்டாடினார்கள்.

ஆனாலும் இலங்கை அரசின் அரசின் பாசிசப் போக்குக்கு எதிராகப் பேசவும் இதுபோன்ற ஊடகவியலாளர்கள் இருக்கிறார்கள் என்கிற மன நிம்மதி இருக்கிறது என்றார்.

Exit mobile version