தமிழக எம்.பிக்கள் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டவர்கள். வேண்டும் என்றே மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தி வருகின்றனர். அவர்களை விசாரிக்க வேண்டும் என்று திமிர்த்தனமாக பேசியுள்ளார் இலங்கை தூதர் பிரசாத் காரியவாசம்.
இந்தப் பேச்சுக்கு இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் டி.ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள ஒரு தொலைக்காட்சிப் பேச்சியில், இலங்கை தூதர் பிரசாத் காரியவாசம் வரம்பு மீறிப் பேசியுள்ளார். தேவையில்லாமல் இந்திய எம்.பிக்களை விமர்சித்துள்ளார். இந்த அடாத செயலுக்கு இதுவரை இந்திய அரசு பகிரங்கமாக கண்டனம் தெரிவிக்கவில்லை.
காரியவாசத்தின் பேச்சு குறித்து நாங்கள் இன்று வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் புகார் தெரிவித்தோம். ராஜ்யசபாவிலும் பிரச்சினை எழுப்பினேன்.
தற்போது வெளியுறவுத்துறை இணைச் செயலாளரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார் காரியவாசம் என்று செய்தி வந்துள்ளது. ஆனால் இது போதாது. அவரை மத்திய அரசு பகிரங்கமாக கண்டிக்க வேண்டும். கண்டனம் தெரிவிக்க வேண்டும். காரியவாசத்தை இந்தியாவை விட்டு அனுப்ப வேண்டும் என்றார் ராஜா.