23.03.2009.
இந்தியாவுக்கு விஜயம் செய்திருக்கும் ஐ. நா சபையின் மனித உரிமைகளுக்கான அமைப்பின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அவர்களை இந்தியாவின் மனித உரிமை அமைப்புகளில் ஒன்றான பியுசிஎல் அமைப்பினர் சந்தித்து இலங்கை விவகாரம் தொடர்பில் பேசியிருக்கிறார்கள்.
இந்தச் சந்திப்பின்போது இலங்கையில் மோதல்கள் நடக்கும் பகுதியில், அரசால் பாதுகாப்பு வலயம் என்று அறிவிக்கப்பட்ட பகுதியில் தொடரும் உயிர்ப்பலிகள் தொடர்பிலும், புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் உருவாகிவரும் மனித அவலம் குறித்தும் பேசப்பட்டதாக, பியுசிஎல் அமைப்பின் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பகுதிகளுக்கான தலைவர் வழக்கறிஞர் வி. சுரேஷ் அவர்கள் தெரிவித்தார்.
மேலும் அங்கு இலங்கை அரசின் படை நடவடிக்கையால் பலர் பலியாவதாக கூறிய அவர், இதற்காக இலங்கை ஜனாதிபதி உள்ளிட்ட இராணுவ நடவடிக்கைகளுக்கு பொறுப்பானவர்கள் மீது சர்வதேச போர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் நடவடிக்கைகளை ஐ. நா மன்றம் துவங்க வேண்டும் என்றும் தாங்கள் கோரியதாகவும் கூறினார்.