Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை ஜனாதிபதித் தேர்தல்:ஏமாற்றப்படும் ஒடுக்கப்படும் மக்கள்

lankan_electionநேற்று இலங்கை சர்வாதிகாரி மகிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையாகத் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். அதே வேளை எதிரணியைச் சார்ந்தவர்கள் பொது உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டனர். எதிரணியில் அங்கம் வகிக்கும் மனோ கணேசன் கூறுகையில் ‘இன்றைய தினம் இந்த நாட்டிலே ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தினமாகும். இங்கு பொது எதிரணியாக ஒரு புரிந்துணர்வு உடபடிக்கையில் கையெழுத்து இட்டுள்ளோம். இந்த உடன்படிக்கை இந்த நாட்டிலே வாழ்ந்து கொண்டிருக்க கூடிய தமிழ் பேசும் தமிழ், முஸ்லிம் மக்களின் அனைத்து பிரச்சனைகளையும் அடையாளப்படுத்தவில்லை. எங்கள் தேசிய அபிலாசைகளுக்கு முழுமையான தீர்வுகளை தரவில்லை’ என்றார்.

ஆக, எதிரணியில் மனோ கணேசன் அங்கம் வகிப்பதற்குக் காரணம் அங்கு ஜனநாயகம் காணப்படுகிறது என்றார். உரிமை இல்லாத ஜனநாயகம் என்ற கேலிக்கூத்து மனோ கணேசனை ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு உந்தித்தள்ளியது கேலிக்கூத்தானது.

அதே வேளை 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வருவதற்குக் காரணமான பிரதான கட்சியான ஜே.வி.பி, ராஜபக்ச லட்சக்கணக்கானோரை அழித்தபின்னர் எதிர்க்கட்சிக்குத் தாவியுள்ளது.
இலங்கையில் இவற்றுள் எந்தக் கட்சிகளும் தமிழ்ப் பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமையை ஏற்றுக்கொள்ளவில்லை.

ராஜபக்ச அரசு சூறையாடிய பணம் முழுவதையும் தனது குடும்பத்தினருடனேயே பகிர்ந்துகொண்டது. இதனால் விரக்தியடைந்த அரசியல் வாதிகள் இதனைத் தமக்கும் பகிர்ந்துகொள்வதற்கான உரிமையையே ஜனநாயகம் என்கிறார்கள். காலனியத்திற்குப் பிந்தய காலம் முழுவதும் ஒவ்வொரு தேர்தல்களும் ஒவ்வொரு சர்வாதிகாரியை நியமிப்பதிலேயே முடிவடைந்திருக்கிறது.

அதே வேளை ஒன்றிணைந்த இடதுசாரிக் கட்சிகள் என்று தம்மை அழைத்துக்கொள்ளும் கட்சிகள் முன்னிலை சோசலிசக் கட்சியைச் சேர்ந்த துமிந்த நாகமுவவை பொது வேட்பளாராகத் தெரிவு செய்துள்ளன.

இலங்கையின் பிரதான முரண்பாடு தேசிய இன முரண்பாடாகவிருக்கும் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலான காலப்பகுதியில் இடது சாரிகள் என்று தம்மை அழைத்துக்கொள்ளும் கட்சிகள் சுய நிர்ணைய உரிமையைக் கூட அங்கீகரித்ததில்லை. இரண்டு பேரினவாதக் கட்சிகளதும் எதிர்கால ஆட்சிக்கு எதிராக சிங்கள மக்கள் மத்தியில் தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமைக்காகவும், உழைக்கும் மக்களை அணிதிரட்டவும் செயற்பட்டால் இலங்கையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும்.

இதனைத் தவிர்த்துப் பாராளுமன்றச் சகதிக்குள் விழுந்துள்ள முன்னிலை சோசலிசக் கட்சி உட்பட இடதுசாரிக் கட்சிகள் தம்மையும் வாக்குப் பொறுக்கிகளாகவே மக்களிடம் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

Exit mobile version