Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் பிரித்தானியத் தலையீடு:வெளிவராத உண்மைகள்

லியாம் பொக்ஸ் உடன் ரனில்
லியாம் பொக்ஸ் உடன் ரனில்

தான் புலிகளின் கொலை முயற்சியிலிருந்து தப்பியவர் என்றும் தன்னைப் புலியென்று ராஜபக்ச பிரச்சாரம் மேற்கொள்கிறார் என்றும் மைத்திரிபால சிறிசேன தனது முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றும் போது கூறினார். இலங்கையில் ஜனவரி மாதம் 8ம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் பிரித்தானிய அரசின் தலையீட்டைக் காண முடிகிறது. பிரித்தானியாவின் இராணுவப் பொருளாதார முதலீடுகள் உட்படப் பல்வேறு நோக்கங்களின் அடிப்படையில் இத் தலையீடு நிகழ்கிறது.

கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற பிரித்தானிய ஆளும் கட்சியான கொன்சர்வேட்டிவ் கட்சியின் மாநாட்டிற்கு இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் ரனில் விக்ரமசிங்க அழைக்கப்பட்டிருந்தார். இந்த மாநாட்டின் போது விக்ரமசிங்க லியாம் பொக்ஸ் மற்றும் லண்டம் மேயர் பொரிஸ் ஜோன்சன் ஆகியோரோடு உரையாடும் நிழல்படங்கள் வெளியாகின.

லியாம் பொக்சிற்கும் ராஜபக்ச குடும்பத்திற்கும் இடையேயான ஒப்பந்தங்களும் உறவுகளும் ஏற்கனவே தெரிந்தவையே. அது மட்டுமல்ல ராஜபக்சவிற்கு ஆதரவாக பிரித்தானியாவில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக வாடகைக்கு அமர்த்தப்பட்ட நிறுவனமான பெல் பொட்டிங்டரின் தொடர்பாளரான ரஜீவ செனிவரத்ன இன்று மத்திரிபாலவின் அணியில் முக்கிய உறுப்பினர்.

தவிர, ரனில் விக்ரமசிங்க பிரித்தானிய ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான நிரஞ்சன் தேவா ஆதித்யா என்பவரையும் பலதடவை சந்தித்தார். கொன்சர்வேட்டிவ் கட்சியின் நீண்டலாக உறுப்பினரான இவர் நிர்ஜ் தேவா என்ற பெயரில் அறியப்பட்டவர். பிரித்தானியாவில் 1992 ஆம் ஆண்டு பாரளுமன்ற உறுப்பினராகவிருந்தார். நிர்ஜ் தேவா இன்று ஐரோப்பியப் பாராளுமன்றத்தில் கொன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்.

தேவாவுடன் ரனில்

ரனிலின் நெருங்கிய நண்பரான நிர்ஜ் தேவா இலங்கை அரசியலில் நீண்டகாலமாகத் தலையிடுபவர். கொழும்பில் பிறப்பிடமாகக் கொண்ட நிர்ஜின் முதலாவது மொழி சிங்களம். ராஜஸ்தானிலிருந்து இலங்கைக்கு வந்து குடியேறிய குடும்பத்தைச் சார்ந்த நிர்ஜ், தனது அரசியல் செல்வாக்கை வியாபார ஒப்பந்தங்களுக்காக நேரடியாகப் பயன்படுத்துவதில் பெயர்பெற்றவர். ரனில் அதிகாரத்திலிருந்த வேளையில் ரனிலின் ஆலோசகர் போலவும் செயற்பட்டவர். பின்னதாக ராஜபக்சவின் மகனுக்கு ஒக்போர்ட் பல்கலைக் கழகத்தில் அனுமதி பெற்றுக்கொடுக்க முயற்சித்துத் தோல்விகண்டவர்.

மேற்கு லண்டனில் ஹவுன்ஸ்லொ பகுதியிலுள்ள தேர்தல் தொகுதியான ஐசில் வேர்த் மற்றும் பிரண்ட்பேர்ட் இல் ஐரோப்பியப் பாரளுமன்ற உறுப்பினராக கொன்சர்வெட்டிவ் கட்சியினால் தேர்தலில் நிறுத்தப்பட்டவர்.

லைக்கா மொபைல் அனுசரணை வழங்கிய பொது நலவாய நாடுகளின் உச்சி மாநாட்டின் போது டேவிட் கமரன் குழுவில் கொழும்பு சென்று அங்கு பல்வேறு லொபி வேலைகளில் ஈடுபட்டார்.

1990 ஆம் ஆண்டில் பிரித்தானியாவில் அரசியல் ஊழல் விவகாரம் ஒன்றில் ஈடுபட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர். பல்வேறு வியாபார நிறுவனங்களின் அரசியல் தலையீடுகளுக்குப் பொறுப்பானவர்.

இவை அனைத்திற்கும் மேலாக சுன்னாகம் மின்சார உற்பத்தி நிலையத்தை நடத்தி யாழ்பாணக் குடி நீரை நச்சாக்கி வரும் எம்.ரி.டி நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவர்.

தனியார் நிறுவனங்கள் சிறிய அளவிலான மின் உற்பத்திற்குப் பயன்படுத்தும் முறையின் ஊடாக யாழ்ப்பாணக் குடா நாடு முழுவதற்கும் மின்சாரம் வழங்கி நீரையும் நிலத்தையும் நச்சூட்டும் மலேசிய நிறுவனமான எம்.ரி.டி கப்பிடலின் இலங்கைக் கிளையான எம்.ரி.டி வோக்கஸ் இன் இயக்குனராக தேவா நியமிக்கப்படுள்ளார்.

இலங்கையில் போர் உச்சத்திலிருந்த காலமான 2008 இன் இறுதிப்பகுதிகளில் தேவா நிறுவனத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டார். ரனில், தேவா மற்றும் லியம் பொக்ஸ் ஆகியோரின் இத் தொடர்புகள் ஊடான தேர்தல் நாடகமே மத்திரிபால சிறிசேனவின் அவதாரம்.

தவிர இலங்கையில் ஆசியாவின் பங்கு சந்தையை நிறுவும் நோக்குடனான இக் கூட்டதின் தலையீடு குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும்…

மேலதிக தகவல்களுக்கு:

யாழ்ப்பாணத்தில் அகதிகளாக்கப்படும் மக்கள் : பண வெறியும் பாசிசமும்

Exit mobile version