Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை செல்லும் தமிழகக் கலைஞர்களுக்கு எதிராக திருமா கண்டன ஆர்ப்பாட்டம்.

போர் வெற்றியை மே மாதம் முழுக்க கொண்டாட இலங்கை அரசு தீர்மானித்துள்ளது. இந்தக் கொண்டாட்டங்களுக்காக அவர்கள் வரவழைப்பது தமிழக சின்னத்திரை, சினிமாக் கலைஞர்களை, இது தமிழகத்தில் கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து

திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை,
சுமார் 50 ஆயிரம் தமிழர்களும் விடுதலைப்புலிகளும் புலிகளின் தளபதிகளும் ஈவிரக்க மற்ற முறையில் கொன்றொழிக்கப்பட்ட மனித அவலத்தை சிங்களர்களின் வெற்றித் திருவிழாவாக எதிர் வரும் மே 18 அன்று கொண்டாடுவதற்கு சர்வதேசப் போர்க் குற்றவாளிகளான ராஜபக்சேக்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.குறிப்பாக மே 12 லிருந்து மே 20 வரையில் இலங்கை முழுவதும் தமிழர்கள் வாழும் வடக்கு கிழக்கு பகுதிகளெங்கும் சிங்களவர்களின் வெற்றிப் பேரணி மற்றும் இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்வுகளை ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்ற பெயரில் நடத்திட தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.தமிழீழ தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை கொன்றொழித்த நாளாகவும் அந்த நாள் சிங்களவர்களின் வெற்றித்திருநாள் எனவும் வெளிப்படையாக அறிவித்து மே 18 அன்று மாபெரும் பேரணியையும் நடத்த திட்டமிட்டுள்ளனர்.இத்தகைய வேதனைகள் நிறைந்த செய்திகளுக்குகிடையில் கொடுமையிலும் கொடுமையாக தமிழர்களே இந்த ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்கள். என்னும் செய்தி கிடைத்துள்ளது. அதிலும் குறிப்பாக வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் தமிழகத்திலிருந்து இசைக் குழுவினரும் கலை நிகழ்ச்சிகள் நடத்தும் கலைக் குழுவினரும் வரும் மே 12 ந்தேதியில் இருந்து பங்கேற்க உள்ளனர் என்பது சகித்துக் கொள்ள முடியாத வேதனையை அளிக்கிறது.காசுக்காக கூலிக்கு மாரடிக்கும் கும்பலைப்போல் இத்தகைய இசை மற்றும் கலைக் குழுவினர் சிங்கள இனவெறியர்களின் அழைப்பை ஏற்று இலங்கைக்குச் செல்வது மிகவும் வெட்கக்கேடான தலைக்குனிவான இழி செயலே ஆகும்.இதனால் தமிழகத்தைச் சார்ந்த ஒட்டு மொத்த தமிழர்களும் மாபெரும் களங்கத்தை சுமக்க வேண்டி வரும். இனமான உணர்வுகள் இல்லாமல் வெறும் பிழைப்புவாதப் போக்குகளைக் கொண்ட இவர்கள் தமிழினப் பகைவர்களுக்கு ஆதரவாக செயல்பட துணிந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும்.இந்நிலையில், இனமானத்தைக் காக்கும் வகையில், தமிழ்நாட்டுத் தமிழர்கள் மீதான களங்கத்தைத் துடைக்கும் வகையில், சிங்களவர்களின் அழைப்பை ஏற்று இலங்கைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். முற்றிலுமாக இப்பயணத்தை கைவிட வேண்டும். இல்லையேல் காலா காலத்திற்கும் இந்த அவமானத்தை துடைத்தெறியவே முடியாது. எனவே, தமிழகத்தைச் சேர்ந்த இசை மற்றும் கலைக்குழுவினர் முள்ளி வாய்க்காலின் பேரவலத்தை எண்ணிப் பார்த்து இந்தப் பயணத்தை முற்றிலும் கைவிட வேண்டுமென்று விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.மேலும் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 10.5.2010 அன்று எனது தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில், தமிழின உணர்வுள்ள அனைவரும் பங்கேற்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் திருமாவளவன்.

Exit mobile version