இலங்கையில் இடம் பெயர்ந்து முகாம்களில் உள்ள தமிழர்களின் நிலை முறித்து ஆராய இலங்கை வரவுள்ள் இந்திய பாராளுமன்ற உறுப்பினர் குழுவில் தி.மு.க, காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய அடங்கிய தி.மு.க கூட்டணி எம்.பிக்கள் மட்டும் இடம்பெறுகின்றனர் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்தக் குழு இலங்கை செல்லும் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் ஸ்டாலின் இக்குழுவில் இடம் பெற மாட்டார் எனத் தெரிகிறது. அவருக்குப் பதிலாக டி.ஆர்.பாலு தலைமை தாங்குவார் என்று தெரிய வருகிறது.
இக்குழுவில் திமுக சார்பில் கனிமொழி, ஏ.கே.எஸ்.விஜயன், ஹெலன் டேவிட்சன், டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் இடம் பெறலாம் எனவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தரப்பில் ராஜ்யசபா எம்.பி. சுதர்சன நாச்சியப்பன், என்.எஸ்.வி.சித்தன், ஹாரூன் ரஷீத், எஸ்.அழகிரி ஆகியோர் இடம் பெறலாம்.விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.பி. திருமாவளவனும் இக்குழுவில் இடம் பெறவுள்ளார்.
இந்தக் குழு சில இடம் பெயர்ந்தோர் முகாம்களைப் பார்வையிட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்திய பின் ஒக்டோபர் 14 ஆம் திகதி இவர்கள் நாடு திரும்புவார்கள்.
இன்று இந்த எம்.பிக்கள் குழு சென்னையில் கூடி சந்தித்து ஆலோசனை நடத்திய பின்னர் நாளைய தினம் இவர்கள் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திமுக கூட்டணி கட்சி எம்.பிக்கள் குழுவின் பயணம் குறித்த முறைப்படியான தகவல் இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.