Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை உட்பட;சிறுவர்களை படைக்கு பயன்படுத்தும் நாடுகளுக்கான இராணுவ உதவிகளை மட்டுப்படுத்துகிறது அமெரிக்கா:HRW.

13.12.2008.

இலங்கை உட்பட 6 நாடுகளுக்கு நெருக்கடி சிறுவர்களை படை நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் அரசாங்கங்களுக்கான இராணுவ உதவிகளை அமெரிக்கா மட்டுப்படுத்துகின்றது. இதில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டிருப்பதாக நியூயோர்க்கை தளமாக கொண்டியங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human rights Watch) நேற்று முன்தினம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இது தொடர்பான சட்டமூலம் அமெரிக்க காங்கிரஸில் (பாராளுமன்றம்) நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை இச்சட்டமூலத்திற்கு ஏகமனதாக அமெரிக்க காங்கிரஸின் செனட்டும் சனப்பிரதிநிதிகள் சபையும் அங்கீகாரம் வழங்கியுள்ளன. இச்சட்டமூலமானது தற்போது அமெரிக்காவின் இராணுவப் பயிற்சி, நிதி மற்றும் ஏனைய இராணுவ உதவிகளைப் பெற்றுவரும் 6 நாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆப்கானிஸ்தான், சாட், கொங்கோ, இலங்கை, சூடான், உகண்டா ஆகிய நாடுகளே இந்த 6 நாடுகளுமாகும்.

சட்டவிரோத நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டோரை பாதுகாக்கும் மீள் அங்கீகாரச் சட்டமூலத்தின் ஒரு பகுதியாக அமெரிக்கா இச்சட்டமூலத்தை நிறைவேற்றியுள்ளது. தமது ஆயுதப் படைகளுக்கு நேரடியாக சிறுவர்களை சேர்த்துக்கொள்ளும் அரசாங்கங்கள் மற்றும் துணை இராணுவக் குழுக்கள் அல்லது போராளிக்குழுக்கள், சிறுவர்களை படையணிக்கு பயன்படுத்துவதற்கு ஆதரவளிக்கும் அரசாங்கங்கள் ஆகியவற்றை இச்சட்டமூலம் பாதிக்கும்.

சிறுவர்களை தொடர்ந்து தமது படைக்கு சேர்க்கும் அரசாங்கங்கள் அமெரிக்க இராணுவ உதவியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சிறுவர் உரிமைகளுக்கான சட்டத்தரணி ஜோ பெக்கர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ஆயுதங்கள் சிறுவர்களின் கரங்களுக்கு சென்றுவிடக்கூடாது. அத்துடன், அமெரிக்காவின் வரி செலுத்துவோரின் பணமானது ஆயுத மோதலுக்கு சிறுவர்களை பயன்படுத்துவதற்கு அதாவது அவர்கள் மீதான துஷ்பிரயோகத்துக்கு உதவுவதாக இருக்கக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

2008 இல் 3.5 மில்லியன் டொலர் செலவினமுடைய அமெரிக்க இராணுவப் பயிற்சியை 6 நாடுகள் பெற்றுள்ளன. இலங்கையும் கொங்கோவும் 8 இலட்சம் டொலர் பெறுமதியான வெளிநாட்டு இராணுவப் பயிற்சியை பெற்றுள்ளன. ஆப்கானிஸ்தான் அமெரிக்காவிலிருந்து 6 பில்லியன் டொலர் பெறுமதியான இராணுவ தளபாடங்களை பெற்றுள்ளது.

ஆப்கானிஸ்தான், சாட், கொங்கோ, சூடான், உகண்டா ஆகியன அரச ஆயுதப் படைகளில் சிறுவர்களை சேர்த்துக் கொண்டிருப்பதாக 2007 இல் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் மனித உரிமைகள் தொடர்பான அறிக்கையில் தெரிவித்திருந்ததுடன் இலங்கையில் அரசுடன் இணைந்து துணை இராணுவக் குழுக்கள் சிறுவர்களை பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்தகாலத்தில் சிறுவர்களை படைக்கு பயன்படுத்துவதை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பான அரசாங்கங்கள் வெற்று வாக்குறுதிகளை அளித்து வந்தன. இப்போது அவர்கள் தமது வாக்குறுதிகளை நிறைவேற்றாவிடின் சர்வதேச ரீதியான கண்டனத்தை எதிர்கொள்வதுடன் இராணுவப் பயிற்சி, ஆயுதங்கள், நிதியுதவி என்பனவற்றையும் இழக்க நேரிடும் என்று பெக்கர் கூறியுள்ளார்.

 

Exit mobile version