முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள தற்காலிக மருத்துவமனை மீது இலங்கை இராணுவம் இன்று நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் நோயாளர்கள் உட்பட 64 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 87 பேர் காயமடைந்துள்ளனர்.
மக்கள் பாதுகாப்பு வலயமான முள்ளிவாய்க்காலில் தற்காலிகமாக இயங்கிவந்த முல்லைத்தீவு பொதுமருத்துவமனை மீது இன்று சனிக்கிழமை காலை 7:00 மணி தொடக்கம் 9:20 மணிவரை எறிகணைத் தாக்குதல்களை அகோரமாக நடத்தியதாக வன்னித்தகவல்கள் தெரிவிகின்றன
இதற்கிடையே இந்த எறிகணை தாக்குதலை தாம் மேற்கொள்ளவில்லை என்று கூறியுள்ள இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரி ஒருவர், அந்தப் பகுதியில் வெடிச்சத்தங்களை தமது சிப்பாய்களும் கேட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கடந்த இரு நாட்களில் விடுதலைப்புலிகள் 6 தற்கொலைத்தாக்குதலை நடத்தியதாகவும் அந்த பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இலங்கை இராணுவத்தின் இணையத்தளத்தில் வெளியாகியுள்ள ஒரு வீடியோவில், தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் விடுதலைப்புலிகள் ஆர்ட்டிலறிகளை நகர்த்துவதை காணக்கூடியதாக உள்ளதாக இலங்கை இராணுவம் கூறியுள்ளது.
இவை குறித்து விடுதலைப்புலிகளின் கருத்தை உடனடியாக பெறமுடியவில்லை. அதேவேளை போர் நடக்கும் பகுதிகளுக்கு செய்தியாளர்கள் அனுமதிக்கப்படாத காரணத்தினால், அங்கு இடம்பெறும் நிகழ்வுகளை சுயாதீனமாக உறுதி செய்யவும் முடியவில்லை.