Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்:ராமதாஸ்

08.12.2008.

இலங்கையைப் பொறுத்தவரையில் ராஜபக்ஷ அதிபராக இருந்தாலும், போர்ப் படைத் தளபதி சரத் பொன்சேகாதான் அனைத்து அதிகாரமும் படைத்த சர்வாதிகாரி போல பேசியும், செயல்பட்டும் வருகிறார்.  பொன்சேகா தமிழக அரசியல் வாதிகளை கோமாளிகள் என்று தெரிவித்த கருத்துக்கு அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழகம் கொந்தளிக்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட செய்தி:
இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து அனைத்துக் கட்சித் தலைவர்களும் முறையிட்டுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்துள்ள இலங்கை போர்ப் படைத் தளபதி சரத் பொன்சேகா, தமிழக அரசியல் தலைவர்களை அரசியல் கோமாளிகள் என தரம்தாழ்ந்து துடுக்குத்தனமாக விமர்சனம் செய்துள்ளார்.

இலங்கையைப் பொறுத்தவரையில் ராஜபக்ஷ அதிபராக இருந்தாலும், போர்ப் படைத் தளபதி சரத் பொன்சேகாதான் அனைத்து அதிகாரமும் படைத்த சர்வாதிகாரி போல பேசியும், செயல்பட்டும் வருகிறார்.

எனவே, அவர் பேசியிருப்பதைத் தனிப்பட்ட ஒருவரின் விமர்சனமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இலங்கையின் குரலாகவே, அந்த நாட்டு அரசின் குரலாகவே அவரது விமர்சனத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.

எனவே, பொன்சேகா தனது கோமாளித்தனமான விமர்சனத்தை உடனடியாகத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும். நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். முப்படைகளின் தலைவர் என்ற முறையில் ராஜபக்ஷவும் பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

இலங்கைத் தூதரை இதனை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும். இன்னும் 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்கத் தவறினால் இங்குள்ள இலங்கைத் தூதரையும், இதர அதிகாரிகளையும் இந்தியாவிலிருந்து வெளியேற்றுவோம் என்று எச்சரிக்க வேண்டும்.

இலங்கைப் படைத் தலைவரின் இந்த விமர்சனத்தை தமிழக முதல்வர் உடனடியாக பிரதமரின் கவனத்துக்கும், வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்துக்கும் எடுத்துச் செல்ல வேண்டும். மன்னிப்பு கேட்காவிட்டால், தமிழகம் கொந்தளிக்கும் என்று தில்லிக்கு எடுத்துக் கூற வேண்டும்.

அத்துடன், வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இன்னும் 48 மணி நேரத்துக்குள் கொழும்புக்கு அனுப்பி, நேரிலும் எச்சரிக்கை விடச் செய்ய வேண்டும். அங்கு தமிழினப் படுகொலைக்குக் காரணமான சண்டையை நிறுத்தும் படி வலியுறுத்த வேண்டும்.

தமிழர்களின் தன்மானத்துக்கு இலங்கைப் போர்ப் படைத் தளபதியால் விடப்பட்டுள்ள அறைகூவலுக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும். அது ஒன்றுதான் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களை அமைதிப்படுத்த முடியும் எனத் தில்லிக்கு எடுத்துக் கூற வேண்டும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version