27.01.2009.
இலங்கை அரசுக்கு உதவுவதற்காக, மத்திய அரசு தற்போது நவீன ரக பீரங்கிகளையும், இராணுவ தளபாடங்களையும் அனுப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லியில் இருந்து ரெயில் மூலம் தமிழகம் வழியாக கொச்சி கொண்டு செல்லப்பட்ட இந்த இராணுவ தளபாடங்கள் அங்கிருந்து திங்கட்கிழமை கப்பல் மூலம் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பீரங்கியை ஏற்றிச் சென்ற ரெயிலை ஈரோட்டில் பார்த்த பொதுமக்கள் கூறியதாவது, ரெயில் ஏறுவதற்காக நின்று கொண்டிருந்தபோது, பீரங்கி வண்டி நின்றது. விசாரித்ததில் இந்த பீரங்கி இலங்கைக்கு கொண்டு செல்லப்படுவதாகத் தெரிவித்தனர்.
இந்நிலையில் மதிமுக பொதுச்செயலார் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர், இராணுவத் தடபாளங்களும், பீரங்கிகளும் ஈரோட்டில் இருந்து கொச்சி வழியாக இலங்கைக்கு அனுப்பப்படுவதாக கூறியதோடு, செய்தித்தாள்களில் வந்த புகைப்படங்களையும் காண்பித்தனர்.
இதுகுறித்து மத்திய அரசு இதுவரை எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை. இந்திய அரசின் இச்செயலை பல்வேறு தமிழ் அமைப்புகளும் கண்டித்துள்ளதோடு, இதுகுறித்து மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளன. மேலும் இராணுவ தளபாடங்களை அனுப்பியதை கண்டித்து போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளன.