Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை இனப்பிரச்சினை:இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முஹர்ஜி கொழும்பு வருகை.

19.10.2008.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவு விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முஹர்ஜியை கொழும்புக்கு அனுப்புவது பற்றி இந்திய மத்திய அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலங்கையில் தற்பொழுது நிலவும் சூழ்நிலை குறித்து நேரில் கண்டறிவதற்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முஹர்ஜியை கொழும்புக்கு அனுப்புமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்தக் கோரிக்கை தொடர்பாக இந்திய மத்திய அரசாங்கம் பரிசீலித்து வருவதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக இந்திய மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உயர்மட்டக் குழுவொன்றை அனுப்புவதற்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ ஆகியோரைக் கொண்ட உயர்மட்டக் குழுவே இந்தியா செல்லவுள்ளது.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வைக் கொண்ட அரசியல் தீர்வொன்று முன்வைக்கப்படவேண்டும் எனவும், தற்பொழுது முன்னெடுக்கப்பட்டிருக்கும் மோதல்களிலிருந்து பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் இந்தியா கூறியிருந்தது.
இலங்கை விடயம் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு புதுடில்லியிலுள்ள இலங்கைத் தூதுவரக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன், இலங்கையின் நிலைப்பாடு பற்றி கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகருக்கு விளக்கமளிக்கப்பட்டிருந்தது.
இருவரைக் கொண்ட இந்த உயர்மட்டக் குழு இந்திய தேசிய பாதுகாப்புச் செயலாளர் எம்.கே.நாராயணன், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ் சங்கர்மேனன் ஆகியோரைச் சந்திக்கவுள்ளனர்.
“விடுதலைப் புலிகளிடமிருந்து ஆயுதங்களைக் களைந்து ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கே அரசாங்கப் படைகள் தற்பொழுது முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்தியப் பிரதமரிடம் எடுத்துக் கூறியிருந்தார்” என இலங்கை வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும், குறிப்பாக தமிழ் மக்கள் பாதுகாக்கப்படவேண்டும் எனவும் இந்தியப் பிரதமர், கோரிக்கை விடுத்திருந்ததாக இந்தியத் தரப்பில் கூறப்படுகிறது.
Exit mobile version