கடந்த ஜூன் மாதம் டெல்லிக்கு வந்த சிறிலங்க அதிபர் ராஜபக்சவுடன் பிரதமர் மன்மோகன் சிங் நடத்திய பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்டதற்கு இணங்க, இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ உறவை பலப்படுத்த பாதுகாப்பு அமைச்சக செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.
கொழும்புவில் இன்று காலை நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் இந்திய பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமார் தலைமையிலான குழுவில் இந்தியாவின் முப்படைகளின் மூத்த அதிகாரிகள், கடலோர காவற்படை, அயலுறவு, பாதுகாப்பு அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகளும், சிறிலங்க அரசின் முப்படைத் தளபதிகளும் கலந்துகொண்டுள்ளனர்.
இந்தச் சந்திப்பில் ஒவ்வொரு ஆண்டின் துவக்கத்திலும் பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளின் முப்படைகளின் தளபதிகளும் தங்களுக்கிடையே தனித் தனியாக பேச்சுவார்த்தை நடத்துவது என்றும், இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்தும் முகமாக இரு நாடுகளின் கடற்படைகளும் இணைந்து பயிற்சி மேற்கொள்வது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
“கடல் வழி பாதுகாப்பு உட்பட டெல்லிக்கும் கொழும்புவிற்கும் பொதுவான பாதுகாப்பு கவலைகள் உள்ளன. இந்த பொதுவான கவலைகளே இரு தரப்பு பரிமாற்றங்களுக்கான பொதுவான அடிப்படையாக இருக்கும்” என்று சிறிலங்க பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.
இந்தப் பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக இலங்கை இராணுவத்திற்கு குறுகிய தூர ஏவுகணைகள், சக்தி வாய்ந்த ராடார்கள் ஆகியவற்றை அளிக்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அது குறித்த அதிகாரபூர்வமாக ஏதும் அறிவிக்கப்படவில்லை.