Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை, இந்திய அரசுகள் மீது கடுமையான விமர்சனம்:நேபாள மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

இலங்கையும் இந்தியாவும் தமது நாடுகளிலுள்ள கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அடக்குமுறை போராட்டத்தை மேற்கொள்வதாக நேபாளத்தின் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கடுமையாக இருநாடுகளையும் விமர்சித்துள்ளது.இந்த மாதிரியான அடக்குமுறைகளை மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு எதிர்ப்பதாகவும் அரசாங்கமானது இந்தமாதிரியான முறையை ஆயுதக் குழுக்களுக்கு எதிராகப் பயன்படுத்துவது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் என்று கருதுவதாகவும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

நேபாள மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியானது தெற்காசிய மாவோயிஸ்ட் கட்சிகளின் ஒத்துழைப்பு அமைப்புடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருக்கும் என்று அக்கட்சியின் தலைவரும் நேபாள முன்னாள் பிரதமருமான பிரசண்டா கூறியுள்ளார்.

தெற்காசிய மாவோயிஸ்ட் கட்சிகளின் ஒத்துழைப்பு (கொம்போசா) அமைப்பானது இந்தியாவில் இரகசியமான தலைமையகத்தைக் கொண்டுள்ளது. அத்துடன், உலகளாவிய ரீதியில் இயங்கும் தீவிர இடதுசாரி போராளிகளின் அமைப்பான புரட்சிகர சர்வதேச இயக்கத்துடன் (ரிம்) நேபாள மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நெருங்கிய தொடர்புகளை தொடர்ந்து பேணிவரும் என்றும் பிரசண்டா கூறியுள்ளார்.

மூன்று வருடங்களுக்கு முன்னர் நேபாள மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சமாதான நடவடிக்கைகளில் இணைவதாக அறிவித்திருந்தது. அதன் பின்னர் அக்கட்சி அவ்வாறு இணைந்தாலும் ஆயுதங்களை கைவிடுவதாக அர்த்தப்படாது என்பது தொடர்பாக தெளிவான செய்தியை பிரசண்டா முதன்முறையாக மூன்று ஆண்டுகளின் பின் விடுத்திருக்கிறார். அத்துடன், நாட்டுக்கு வெளியேயுள்ள எந்தவொரு ஆயுத அமைப்புக்கும் ஆதரவு வழங்குவது குறித்தும் அவர் அறிவித்திருக்கிறார்.

அதேவேளை, நேபாளத்தின் இராணுவத்தளபதி கத்தாவாவை மீண்டும் பதவியல் அமர்த்திய, அரசியலமைப்புக்கு முரணான நடவடிக்கையை சீர்படுத்துவதற்கு நேபாள அரசுக்கு அவர் காலக்கெடு விதித்துள்ளார். இந்தக்காலக்கெடுவுக்குள் எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிடின் நாம் மக்கள் கிளர்ச்சியை ஆரம்பிப்போம் என்று அவர் கூறியுள்ளார்.

 

 

 
Exit mobile version