லங்கா டிசன்ட் என்ற கொழும்பிலிருந்து இயங்கும் இணையத்தளம் இதுவரை சிறீ லங்கா அரச பயங்கர வாதத்தை அம்பலப்படுத்துவதில் காத்திரமான பங்களிப்பைச் செய்துவந்தது. மேர்வின் டி சில்வா என்ற அரச அமைச்சர் தனது அடியாட்கள் சகிதம் ஊடகவியளர்கள் மீதும் குறிப்பாக ரூபவாகினிக் கூட்டுத்தாபனத்தின் செய்தித்துறை அலுவலகத்திற்குள் நுழைந்து அடாவடித்தனம் புரிந்தபோதும், அச்சம்பவத்தை அம்பலப்படுத்துவதில் முக்கிய பாத்திரம் வகித்திருந்தது. இச்செய்தி இணையம் நேற்றுடன் மூடப்பட்டது.
கொழும்பில் மிகப்பெரிய தனியார் செய்திச் சேவை நிறுவனமான, மகாராஜா நிறுவனம் தாக்கப்பட்ட இரு தினங்களில் , ஊடகத்துறையில் செல்வாக்கு மிக்க சர்வதேச ஊடகவியளாளரும், சண்டே லீடர் இதழின் ஆசிரியருமான லசந்த விக்கிரமதுங்க கொலைசெய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து பெரும்பாலான ஊடகங்கள் எப்போதும் தாக்கப்படலாம் என்ற பயத்தின் மத்தியில் வாழ்கின்றன. அரசிற்கெதிரான எந்தச் செய்தியும் வெளிவர முடியாத நிலை காணப்படிகிறது.
மறு புறத்தில் கடந்த வெள்ளியன்று, இலங்கையின் கீழ் நிலைப் பாடசாலைகள் அனைத்திலும் இலங்கையின் சிங்கக் கொடியை ஏந்தி “இராணுவம் நீடூழி வாழ்க”. “சிறீலங்கா வாழ்க”. “ஜனாதிபதி புகழ் ஓங்குக” என்ற கோஷங்கள் அரசாங்கத்தின் உத்தரவி பேரில் எழுப்பப்பட்டதாகவும், வயது வேறுபாடின்றி தமிழ் பேசும் மக்களுகெதிரான உணர்வலை ஒன்று எழுந்துள்ளதாகவும் தெரிவித்த பெயர் குறிப்பிட விரும்பாத கொழும்புசார் சிங்கள ஊடகவியலாளர் ஒருவர், மக்களின் ஆதரவுடன் கொடிய பாசிசம் ஒன்று வளர்ச்சியடைந்து வருவதாகவும் கவலை தெரிவித்தார்.
மகிந்த குடும்ப ஆட்சி தன்னை நீண்ட காலத்திற்குத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் உருவாக்கப் படும் இந்தப்பாசிசத்திற்கெதிரான போராட்டம் அனைத்துக் வழிகளிலும் முன்னெடுக்கப்பட வேண்டும் என மேலும் தெரிவித்த அவர், சஜித் பிரேமதாச, பாக்கியசோதி சரவணமுத்து, மங்கள சமரவீர, போன்றோர் அரசாங்கத்தின் கொலைப்பட்டியலில் முன்னிடம் வகிப்பதாகவும், அவர்கள் எந்த நேரத்திலும் கொலைசெய்யப்படலாம் என அஞ்சுவதாகவும் தெரிவித்தார்.
புலிகளின் பாணியிலேயே புலம் பெயர்னாடுகளிலும் தனது உளவுப் பிரிவை விஸ்தரித்துவரும் இலங்கை அரச பாசிசம் என்பது இலங்கைக்கு மட்டுமல்ல தெற்காசியாவின் அமைதிக்கே பாதகமானதாக அமையும் எனக் கவலை தெரிவித்த அந்த ஊடகவியலாளர், அரச பாசிசத்திற்கெதிராக புலம் பெயர் நாடுகளில் மட்டுமே போராட்டங்களை நடாத்தக் கூடிய சூழ்நிலை காணப்படுவதாகவும் குறித்துக் காட்டினார்.