
இன்ன சிற்றி பிரஸ் ஐக்கிய நாடுகளின் ராஜபக்ச ஆதரவு நிலைப்பாட்டை மறுபடி மீண்டும் கேள்வியெழுப்பியுள்ளது. இலங்கை தொடர்பாகக் கேள்விகள் முன்வைக்கப்படும் போது “உறுதிப்படுத்த முடியவில்லை”, “கருத்துக்கள் இல்லை”, “இது நிபுணர் குழுவைச் சார்ந்தது” என்று கூறுவதனூடாகத் பதிலளிப்பதைத் தவிர்த்து வந்துள்ளனர் என இன்ன சிற்றி பிரஸ் ஊடகவியலாளர் மத்தியூ ரஸல் லீ தெரிவித்துள்ளார்.
இந்த வருட ஆரம்பத்தில் பன்கீ மூனின் பேச்சாளர் மார்டின் மார்ட்டின் நெசேர்க்கி இன்ன சிற்றி பிரசிற்குக் கூறுகையில் இலங்கை ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலியகொட காணாமல் போனது குறித்து தமக்கு ஐ.நா விற்கு எந்த முறைப்பாடும் கிடைக்கவில்லை எனக் குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி நீல் பூனே தமக்கு அனுப்பிவைக்கப்பட்ட முறைப்பாடுகள் கிடைத்ததாக ஊடகங்களுகுக் கூறிய பின்னரும் கூட பன் கீ மூனின் பேசாளர் முறைப்பாடுகள் எதுவும் ஐ.நாவிற்குக் கிடைக்கவில்லை என மீண்டும் கூறினார்.
இம்மாதம் 7ம் திகதியன்று ஐந்து முக்கிய சுதந்திர ஊடகங்கள் பன் கீ மூனின் அலுவலகத்திற்கு நேரடியாக தொலை நகல் ஊடாக இவ்விவகாரத்தில் ஐக்கிய நாடுகளின் ஈடுபாடு குறித்துக் கேள்வியெழுப்பியிருந்தனர்.
மார்ச் 8ம் திகதி நெசேர்க்கியிடம் (பன் கீ மூனின் செயலர்) இதே கேள்விகளை இன்னசிற்றி பிரஸ் முன்வைத்தது. இக்கேள்விக்குப் பதிலளித்த பன் கீ மூனின் பேச்சாளர் மார்ட்டின் நெசெர்ஸ்கி, இது குறித்துத் தமக்கு மேலதிக தகவல்கள் தெரியாதெனவும் தான் அறிந்து கொண்ட வரை மனித உரிமைகளுக்கான உரயரக ஆணையத்தைச் சேர்ந்தவர்கள் இதனைப் தீவிரமாகப் பரிசீலிக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக 7ம் திகதியன்று பன் கீ மூனின் நிபுணர் குழுவினர் இலங்கையின் சட்ட ஆணையாளருடன் இரகசியச் சந்திப்பு ஒன்றை நடத்தியதாக வெளியன தகவல்கள் குறித்து கேள்வியெழுப்பிய போது அது குறித்துக் கருத்துத் தெரிவிக்க பன் கீ மூனின் பேச்சாளர் மறுத்துவிட்டார்.
இவ்வாறான சந்திப்பு ஒன்ற நடைபெற்றதா என்பது குறித்தும் இலங்கை தொடர்பான அறிக்கை குறித்தும் கருத்து வெளியிடுவது நிபுணர் குழுவைப் பொறுத்ததே என பன் கீ மூனின் பேச்சாளர் பதிலளித்தார்.
இதற்கு நிபுணர் குழு பன் கீ மூனின் நிபுணர் குழு அல்லவா என இன்ன சிற்றி பிரஸ் கேள்வியெழுப்பிய போது, நிபுணர் குழு சுதந்திரமாக வேலை செய்யவேண்டும் எனவும் அறிக்கை தயாராகும் போது அது பன் கீ மூனிற்குக் கையளிக்கப்படும் எனவும் தெரிவித்தார். தவிர நிபுணர் குழுவின் அறிக்கை பொதுத்தளத்தில் வெளியிடப்படுமா என இன்ன சிற்றி பிரஸ் கேள்வியெழுப்பிய போது, அது நிபுணர் குழுவையும் பன் கீ மூனின் ஆலோசனையையும் பொறுத்தது என பேச்சாளர் தெரிவித்தார்.
ஈராக்கில் குழந்தைகளுக்கான மருத்துவப் பொருட்களைத் தடைசெய்து 1 மில்லியன் குழந்தைகளின் மரணத்திற்குப் பொறுப்பாகவிருந்த ஐக்கிய நாடுகளின் ராஜபக்ச அரசிற்குச் சார்பான நிலைப்பாடு வியப்படையத்தக்க விடயமல்ல. இந்திய அரசும், இந்திய மக்களைச் சுரண்டுவதற்கான அமரிக்க ஐரோப்பிய அரசுகளின் இந்திய அரசுடனான இணைவும், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் புதிய மறு சீரமைப்பை உருவாக்கியுள்ளது. இவ்வதிகார அமைப்புகளின் ஒன்றிணைவிற்கு எதிரான அரசியல் இலங்கையில் அனைத்துத் தரப்பாலும் அழிவிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
எஞ்சியிருக்கும் மக்கள் சார்பற்ற குறுந்தேசிய வாதத் தலைமைகள் ஐக்கிய நாடுகளையும், அமரிக்க ஐரோப்பிய நாடுகளையும் முழுமையாக நம்பியிருக்கின்றன. உலகின் பலம் மிக்க பெரும்பகுதியினரான ஒடுக்கப்பட்ட மக்களுடனான இணைவை நிராகரித்து ஒடுக்கும் அரசுகளுடன் கைகோர்த்துக்கொள்ளும் குறுந்தேசிய வாதத் தலைமைகள் இலங்கை அரச பாசிசத்திற்கு எதிரான உறுதியான அரசியல் தலைமை உருவாவதற்கு மிகப் பெரும் தடையாக அமைந்திருக்கின்றன.
அவ்வப்போது கண்துடைப்பிற்காக ஐக்கிய நாடுகளும், மேற்குலகமும் விடுக்கும் அறிக்கைகளை தமது வெற்றியாகப் பறைசாற்றும் குறுந்தேசிய வாத அமைப்புக்கள் இவ்வதிகார அமைப்புக்களுக்கு எதிரான அரசியல் தலைமை உருவாவதற்கு மிகப் பெரும் தடையாக அமையும் என்பது மற்றொரு அபாயமாகும்.