இலங்கை அரசு மற்றும் இலங்கை ஜனாதிபதி மகிந்தராஜபக்சவுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனிவா மனித உரிமைக் கூட்டத் தொடரில் கொண்டு வரப்படவுள்ள போர்க்குற்ற விசாரணைப் பரிந்துரையிலிருந்து நாட்டையும் ஜனாதிபயையும் காப்பாற்றுவதற்கே இந்த உத்தரவை அரசு விடுத்துள்ளது.
பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் இந்த உத்தரவை விடுக்கும் கடிதங்களை இலங்கையில் உள்ள அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது ஒரு அரசின் அவசர உத்தரவு என்று கடித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் கிராமசேவகர்களும் சமுர்ததி உத்தியோகத்தர்களும் தமது பகுதிகளில் மக்களை அழைத்துச் சென்று அப்பகுதிகளில் உள்ள ஆலயங்களில் நாட்டையும் ஜனாதிபதியையும் காப்பாற்றும்படி பிரார்த்திக் கொண்டு மணி எழுப்ப வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
பௌத்த விகாரைகளில் பிரித் பாராயணம் இடம்பெற வேண்டும் என்றும் இந்து மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களில் மணி ஒலிப்பு ஆராதனைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் பள்ளி வாசல்களில் விசேட தொழுகை நடத்த வேண்டும் என்றும் பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அரசின் பெயரில் உத்தரவிட்டுள்ளது.
கடந்த வாரம் பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அரச திணைக்களங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் அனைவரும் ஜெனிவா மனித உரிமைக் கூட்டத் தொடரில் கொண்டு வந்துள்ள போர்க்குற்ற விசாரணைப் பரிந்துரையிலிருந்து நாட்டையும் ஜனாதிபயையும் காப்பாற்றுவதற்கு பேரணிகளில் ஈடுபடுமாறு வற்புறுத்தப்பட்டிருன்தனர்.
இலங்கையில் உருவாகிவரும் பொருளாதாரச் சிக்கல்களை எதிர்கொள்ள முடியாமல் சரிவை எதிர் நோக்கியிருந்த இலங்கை அரசை மீளமைப்பதற்கான கருவியாக மேற்கு எதிர்ப்பு சுலோகத்தை மகிந்த அரசு பயன்படுத்திவருகிறது. அமரிக்கா முன்மொழிந்த பிரேரணையில் இலங்கை அரசால் உருவாக்கப்பட்ட நல்லிணக்க ஆனைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுமாறு மட்டுமே கோரப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக இலங்கையில் மகிந்த அரசிற்கு எதிரான போராட்டங்கள் உருவாகியிருந்தன. அவற்றை எதிர்கொள்வதற்காக மகிந்த ராஜபக்ச மீதான அனுதாப அலை ஒன்று ஏற்படுத்தப்படுகின்றது.