Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை அரசை பொறுத்தவரை இனி விடுதலைப்புலிகள் என்பதே கிடையாது:கோத்தாபய ராஜபக்ஷ்

இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான தமது போரில் தமது ஆயுதங்களை பயன்படுத்துவதில்லை என்று முடிவெடுத்துள்ளதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப்புலிகளின் ஆதரவு இணையத்தளமாக கூறப்படும் தமிழ் நெட் இணையத்தில் வெளியான அறிக்கை ஒன்றில், இந்தப் போர் ஒரு கசப்பான முடிவை எட்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவோ அல்லது பிரிட்டனோ தமது பாதுகாப்புக்கு உத்தரவாதம் தந்தால் தாம் தமது ஆயுதங்களை களைய தயாராக இருப்பதாக விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் துறை பொறுப்பாளர், பிரிட்டிஷ் செய்தித்தாள் ஒன்றுக்கு கூறியுள்ளார்.

ஆனால், விடுதலைப்புலிகள் சரணடைவதாயின் வெள்ளை துண்டு ஒன்றை அசைத்தவாறு அச்சுறுத்தல் இல்லாத வகையில், இராணுவத்தினரை நோக்கி நடந்து வருவதுதான் ஒரே வழி என்று இலங்கை வெளியுறவு அமைச்சின் செயலர் பாலித கோகன்ன தெரிவித்துள்ளார்.

இருந்தபோதிலும், சண்டை இன்னமும் தொடருவதாகவும், விடுதலைப்புலிகள் தம்மிடம் எஞ்சியுள்ள மிகச் சிறிய நிலப்பரப்பில் இருந்துகொண்டு, தற்கொலைத் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும், இலங்கை இராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன.

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் குறித்து எந்தவிதமான தடயமும் இல்லை என்றும் அவை கூறுகின்றன.

விடுதலைப்புலிகளை தாம் தோற்கடித்து விட்டதாக சனிக்கிழமை அரசாங்கம் கூறியுள்ளது.

விடுதலைப் புலிகளின் அறிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கை பாதுகாப்புத்துறைச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ். தங்களை பொறுத்தவரை இனி விடுதலைப்புலிகள் என்பதே கிடையாது என்றும், யாரும் எந்த அறிக்கையும் கொடுக்கலாம் என்றும், இன்றைய அளவில், தாங்கள் எல்லா பொதுமக்களையும் விடுதலைப்புலிகளின் அணிகளிடமிருந்து மீட்டு விட்டோம் என்றும் கூறினார்.

மேலும், அங்கு கால்மைதானம் அளவுக்கு இருக்கும் முள் புதர்கள் நிறைந்த காட்டுப்பகுதி ஒன்று இருப்பதாகவும் அதை இன்றிரவோ அல்லது நாளையோ அவர்களின் பிடியிலிருந்து அகற்றவேண்டும் என்றும், எனவே இனி அங்கு பீரங்கிகள் அல்லது துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுவது நிறுத்தப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் கூறினார். அத்தோடு எல்லா துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுவிட்டன என்றும் அந்த சின்னஞ்சிறிய பகுதியில் சில விடுதலைப்புலி தலைவர்கள் எஞ்சியிருப்பார்கள் என்று தான் நினைப்பதாகவும் அவர் கூறினார்.

மூலம் – BBC

Exit mobile version