சர்வதேச போர் நெறிமுறைகளை மீறி 50 ஆயிரம் பேரை படுகொலை செய்த இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்று அதிமுக எம்.எல்.ஏ. ஜெயக்குமார் கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் அ.இ.அ.தி.மு.க உறுப்பினர் ஜெயக்குமார் எழுந்து, இலங்கையில் சர்வதேச போர் நெறிமுறைகளை மீறி 50 ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டது குறித்து பிரச்சனை எழுப்ப முயன்றார். இதற்கு அவைத் தலைவர் ஆவுடையப்பன் மறுத்தார்.
இதை கண்டித்து அ.இ.அ.தி.மு.க மற்றும் மதிமுக உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். வெளியே வந்த ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
இலங்கை அரசும், சிங்கள ராணுவத்தினரும் இணைந்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி தமிழர்களை கொன்று குவித்துள்ளனர். அவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வேண்டும்.
இதற்காக இலங்கை அரசு மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர மத்திய அரசை வலியுறுத்தும் தனித் தீர்மானத்தை கொடுத்திருந்தோம். இதை நிறைவேற்றும்படி நாங்கள் விடுத்த கோரிக்கையை சபாநாயகர் ஏற்கவில்லை. இதை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.